அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் ஆளுநர் மாளிகை சென்று ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ஆளுநர் ரஜினிகாந்த் சந்திப்பு:

கடந்த 2021 ஆம் ஆண்டே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்திற்கு முடிவுரை எழுதியிருந்தார். அதன்பின் ரஜினி அரசியலில் ஈடுபடமாட்டார் என நினைந்திருந்த நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், அரசியல் குறித்து பேசியதாகவும் கூறினார். ஆனால் அது குறித்து உங்களிடம் கூற முடியாது என்று சொல்லி முடித்துவிட்டார். நேற்றைய தினம் இவர்களின் சந்திப்பு என்பது, மிகவும் ஆராய்ந்து பார்க்கபட வேண்டிய விஷயமாகவே கருதப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்வீட்:

ஆளுநர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஆர்.என். ரவி உடனான சந்திப்புக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே.

ஆனால், சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தாங்கள் அரசியல் பேசியதாகவும், அதுகுறித்து ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளதாக குறிப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள பாலகிருஷ்ணன்,  ஆளுநர் கட்சி பிரதிநிதியாக செயல்படக் கூடாது எனவும் சாடியுள்ளார்.

அரசியல் அலுவலகமா மாற்றப்படுகிறதா ஆளுநர் மாளிகை:
 
நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை ஆளுநர் பேச வேண்டிய அவசியம் எதனால் வந்தது? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில் ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு மாற்றாக, போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றியுள்ளது கண்டனத்திற்கு உரியதும் என்றும், இதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் ஆளுநர் அலுவலகம் மாற்றப்படுவது தமிழக மக்கள் நலனுக்கு விரோதமானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், தொடர்ந்து அதிகார வரம்பை மீறி செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்? என்று வினவி உள்ளார்.

இவருடைய கருத்தை அடுத்து, ஆளுநர் மாளிகையில் ஏன் அரசியல் வந்தது? ஒருவேளை அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? மாறி வருகிறதா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.