யார் உண்மையான அதிமுக கட்சி? ஓ.பி.எஸா? அல்லது ஈ.பி.எஸா?

யார் உண்மையான அதிமுக கட்சி? ஓ.பி.எஸா? அல்லது ஈ.பி.எஸா?

அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் இணைஒருங்கிணைப்பாளர் பதிவு தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் தொடங்கியது:

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று தொடங்கியது. அதேசமயம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில், அழைப்பு விடுத்திருந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகளும் கலந்து கொண்டன. 

முதல் நபராக சென்ற கோவை செல்வராஜ்:

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுக சார்பில் ஈ.பி.எஸ், ஓபிஎஸ் இருவருக்கும் தனி தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று தொடங்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முதல் நபராக  ஓ.பி.எஸ் சார்பில் கோவை செல்வராஜ் சென்றிருந்தார். ஈ.பி.எஸ் சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் இருவரும் கலந்து கொண்டனர்.

அதிமுக பெயர் பலகையை எடுத்து தன்முன் வைத்துக்கொண்ட ஈ.பி.எஸ் அணியினர்:

தேர்தல் ஆணைய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வருகை தந்த இருதரப்பினரும் கூட்டத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது, கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக பெயர் பலகையை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடுத்து தன்முன் வைத்துக்கொண்டார். இந்த சம்பவம் அரசியல் வல்லுநர்களிடையே மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. அதுமட்டுமல்லாமல், அதிமுகவின் பெயர்பலகைக்காக தான் கோவை செல்வராஜ் முதல் நபராக கூட்டத்திற்கு வந்தாரா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்து வருகிறது.

கோவை செல்வராஜ் பேட்டி:

தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக்கட்சி  கூட்டத்தில் ஓ.பி.எஸ் சார்பில் கலந்து கொண்ட கோவை செல்வராஜ், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் இன்று கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த கருத்துக்களை எடுத்து கூறியதாக தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு நடத்தபடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  இதேபோன்று எங்கு கூட்டம் நடந்தாலும் அண்ணா திமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சார்பில் நாங்கள் கலந்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தான்:

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கட்சியில் கடந்த 1-12-2021 ஆம் தேதியில் எடுத்த தீர்மானம் படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் கட்சி தலைமைக்கு இருக்கிறார்கள். வேறு எந்த மாற்றமும் செய்யபடவில்லை. இன்றை வரைக்கும் தேர்தல் ஆணையத்தில்  ஒருங்கிணைப்பாளர் இணைஒருங்கிணைப்பாளர் பதிவு தான் உள்ளது. எடப்பாடி பெயரில் வேறு எந்த பதிவும் தேர்தல் ஆணையத்தில்  இல்லை என்று கூறிய அவர், கட்சிக்கு தலைவர் ஓ.பன்னீர் செல்வம்  மட்டும் தான் என்று உறுதிபட தெரிவித்தார். 

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக கட்சி என்றால் நாங்கள் தான். அவர்கள் (கோவை செல்வராஜ்) எந்த கட்சி என்று எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். 

சந்தேகம்:

இப்படி மாறி மாறி  ’நாங்கள் தான் அதிமுக கட்சி, கட்சிக்கு தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மட்டும் தான்’ என்று  கூறினால், உண்மையான அதிமுக கட்சி யார் ? ஓ.பி.எஸா? அல்லது ஈ.பி.எஸா? என்ற கேள்விகள் எழுகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு என்பது தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கிறது.