ஓ!! சசிகலா மீது வேறொரு வரி வழக்கு இருந்ததா? 25 வருஷம் கழிச்சு அந்த வழக்கு முடிவுக்கே வந்துடுச்சு..!

செல்வ வரிக்கும், சொத்து வரிக்கும் இடையேயான வித்தியாசம் என்ன?

ஓ!! சசிகலா மீது வேறொரு வரி வழக்கு இருந்ததா? 25 வருஷம் கழிச்சு அந்த வழக்கு முடிவுக்கே வந்துடுச்சு..!

வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை முடித்து வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அதென்ன செல்வ வரி? அப்போ சிறை தண்டனை அனுபவித்தது எந்த வழக்கிற்கு? அது சொத்து குவிப்பு வழக்காயிற்றே.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 

கடந்த 1996-1997-ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கூறி மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு 2001-ம் ஆண்டு சசிகலா தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டிருந்த தகவலின் படி, 1996-97- மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை அதிகாரிகள், செல்வ வரியாக 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயை செலுத்த சசிகலாவிற்கு உத்தரவிட்டனர். 

இதனை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்யவும், 40 லட்சம் ரூபாய் கடனை கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளவும் மதிப்பீட்டு அலுவலருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை ஆணையர் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு சசிகலா மற்றும அவரது உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறையில் 1 கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி நடவடிக்கையை கைவிடுவதாகவும், வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தது. இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை சார்பில் சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

அதென்ன செல்வ வரி என்ற சந்தேகத்திற்கான பதிலை பார்ப்போம். நகை, வாகனம் போன்ற அசையும் சொத்துகளின் மீது விதிக்கப்படுவது செல்வ வரி எனப்படுகிறது. வீடு, கடை, நிலம் போன்ற அசையா சொத்துகளின் மீது விதிக்கப்படுவது சொத்து வரியாகும். சசிகலா மீது இந்த இரு வழக்குகளும் இருந்த நிலையில், செல்வ வரியில் இருந்து அவர் விடுபட்டு இருக்கிறார். 

செல்வ வரியும் சொத்து வரியும் வேறுபட்டவை. வீடு, கடை போன்ற அசையாச் சொத்துக்களின் மீது விதிக்கப்படுவது சொத்து வரி. இந்த சொத்துவரி என்பது மாநில அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். நகை, வாகனம் போன்ற அசையும் சொத்துக்களின் மீது செல்வ வரி விதிக்கப்படுகிறது. செல்வ வரி , மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.