மே 12: உலக செவிலியர் தினம்  : தன்னலமற்ற சேவையின் மறுஉருவம் செவிலியர்கள் !!

கொரோனாவுக்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்தில் முன்கள பணியாளர்களாக முன்நிற்கும் செவிலியர்களின் சேவையை போற்றும் தினமாக இன்று சர்வதேச செலவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மே 12: உலக செவிலியர் தினம்  : தன்னலமற்ற சேவையின் மறுஉருவம் செவிலியர்கள் !!

அன்பின் இருப்பிடம், தியாகச் சுடர், பொறுமையின் சிகரம், சேவையின்மறு உருவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஒரு தாய்க்கு இருக்கும் குணங்கள். செவிலியர்களை மறுபிறவி எடுத்த அன்னையராகக் கருதலாம். உறவாகவோ, நட்பாகவோ இல்லாத ஓர் மூன்றாம் நபர், நம் மீது பரிவு காட்டுவது பலருக்கு சாத்தியமில்லை. ஆனால், செவிலியர்கள் பரிவுடன் சேவை புரிகிறார்கள்.

செவிலியரின் பணி என்பது மனித வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே உள்ளது. தாய் என்பவள், குழந்தைப் பராமரிப்பில் ஆரம்பித்து, அவர்களைக் காப்பாற்றி, நோய்களிலிருந்து குடும்பத்தினரைப் பாதுகாத்து, வீட்டில் உள்ள முதியோரைக் கவனிப்பது வரை தொடர்கிறது. எங்கெல்லாம் அன்பு நிறைந்த சேவை தேவையோ,அங்கெல்லாம் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். அதனால்தான் செவிலியர் பணியில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள்.

நோயின் வலியிலும், வேதனையிலும் நாம் துடித்த காலத்தில், மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்யும் செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் நாளாக ‘உலக செவிலியர்’ தினம் கொண்டாடப்படுகிறது.

1965 ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச்  சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 

அன்றைய தினத்தை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.  

இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் அனைவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவை பரிமாறப்படுவதை குறிப்பதாக கருதப்படுகிறது. 

மோசமான நோய்களுடன் உள்ள நோயாளிகளுக்கு நெருங்கிச் சேவை செய்யும் செவிலியர்கள், பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் அவர்கள், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. இதையெல்லாம் தாண்டி, பலரையும் நோயிலிருந்து மீட்கவும், தேவையில்லாமல் நிகழும் மரணங்களைத் தடுக்கவும், மருத்துவர்களுடன் இணைந்து மகத்தான சேவையில் செவிலியர்கள் ஈடுபடுகின்றனர்.

தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா தொற்று நோய். உலக மக்களின் நன்மைக்காக செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக பணிசெய்து வருகிறார்கள். ஊண் உறக்கமின்றி இரவு பகல் பாராது பணியாற்றுகின்றனர். பாதுகாப்புக்கான கவச உடைகளை அணிந்தால், பலமணி நேரம் இயற்கை உபாதைக்காகக் கூட செல்ல முடியாது. தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளைப் பிரிந்து, ‘எந்த நேரத்திலும் கொரோனா நோய் தங்களைத் தாக்கக் கூடும்’ என்ற ஒருவித பயத்திலேயே பணியைக் குறைவின்றி செய்து வருகிறார்கள்.

உலக மக்களின் நன்மைக்காக உழைக்கும் செவிலியர்களின் பணிக்கு நாம் ‘நன்றி’ என்று ஒற்றைவார்த்தையில் கூறி அவர்களின் பணியை குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என்றும் நலமுடன் வாழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு மனதார வாழ்த்துவோம். சிரித்த முகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவை செய்யும் செவிலியர்களைப் போற்றுவோம்.