இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடந்துள்ளது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு கட்டியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டுமான பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை, சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அதே சமயத்தில் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே புதிய நாடாளுமன்றத்தில் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக செங்கோல் வைக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
பண்டைய அரசர்களும் செங்கோலும்:
செங்கோலும் வெண்கொற்றக் குடையும் சங்ககால தமிழ் மன்னர்களின் அடையாளமாகும். செங்கோல் என்பதற்கு செம்மை + கோல் என்று பிரித்து பொருள் கூறப்படுகிறது. செம்மை என்பதை பொதுவாக செழுமையை குறிக்கும் என்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் இது பாதி, நடுநிலைமை, நேர்மையை ஆகியவற்றையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக, செங்கோணம் என்பது ஒரு முக்கோணத்தை சரிசமமாக இரண்டாக பிரிப்பது. செங்குத்து மலை என்பது நேராக வளர்ந்திருக்கும் மலையை குறிப்பது. திருவள்ளுவரும் கூட "கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது" எனும் குறளில் செம்பாகம் எனும் சொல்லை சரிபாதி எனும் பொருளில் பயன்படுத்தியிருப்பார்.
தமிழ் மன்னர்களின் பண்டைய அரசவை என்பது வெறும் அமைச்சரவையாக மட்டுமின்றி நீதி வழங்கும் நீதிமன்றமாகவும் இருந்துள்ளது. அரசவையின் நடுவே அரசர் அமர்ந்திருக்க இருபுறமும் எதிர் எதிரில் நிற்கும் புகார்தாரர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவிப்பர். இந்த புகார்களை விசாரிக்கும் அரசன் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு தீர்ப்புகளை வழங்க வேண்டும் என வழங்கப்படுவதே செங்கோல்.
சுதந்திரமும் செங்கோலும்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1947 ஆம் ஆண்டு சுதந்திர நாளின் போது செங்கோல் வழங்கப்பட்டது பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால் இதை பற்றி பல ஆண்டுகளாக பேசிவருபவரும் 'கோளறு பதிகம்-விரிவுரை’ எனும் நூலின் ஆசிரியருமான மு.பெ.சத்தியவேல் முருகனாரிடம் கேட்டபோது,
"1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா அதிகாரமாற்றத்தை அடைந்தபோது, அதிகார மாற்றம் பெறும் நிகழ்வினை இந்திய பாரம்பரிய முறைப்படி நடத்த மவுண்ட் பேட்டன் முடிவெடுத்தார். இதுத் தொடர்பாக ஜவகர்லால் நேருவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். நேரு பண்டிட்தான் என்றாலும் அவருக்கு மதப் பற்றுக் கிடையாது. ஆனால், பிறர் செய்யும் மத சடங்குகளை தடுப்பதும் இல்லை. இதனால் அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலச்சாரியிடம் நேரு அதிகார மாற்றத்தின் போது நடைபெற வேண்டிய சடங்குகளை கவனித்துக்கொள்ள சொன்னார். கடைசி நேரத்தில் இந்த பொறுப்பு இராஜகோபாலச்சாரியிடம் கொடுக்கப்பட்டது. அதனால், மதராஸ் மாகாணத்தில் இருந்த பல்வேறு ஆதீனங்களை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தைத் மட்டுமே அவரால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு அப்போது உடல் நலமில்லாமல் இருந்திருந்திருக்கிறது. இதனால் ஆதீனத்தின் செங்கோலுடன் கட்டளைத் தம்பிரான் ஒருவரையும், ஓதுவார் ஒருவரையும் டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு நேரத்தில் செங்கோலை எடுத்துக்கொண்டு அவசரமாக புறப்படும்போது, ஓதுவார் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் எந்த திருமுறைப்பாடலை நான் பாட வேண்டும்? எனக் கேட்டுள்ளார். அப்போது கோளறு பதிகத்தை பாடுமாறு ஆதீனம் ஓதுவாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையிலிருந்து சென்னை வந்த கட்டளைத் தம்பிரானும் ஓதுவாரும் தனி விமானத்தில் டெல்லிக்குக் அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் காலையில் அதிகார மாற்றத்திற்கான விழா டெல்லியில் நடைபெற்றது. அப்போது கட்டளைத் தம்பிரான் நேருவிடம் ஆதீனம் கொடுத்தனுப்பிய தங்கமுலாம் பூசிய செங்கோலைக் கொடுக்க ஓதுவார் கோளறு பதிகத்தின் இறுதிப் பாடலை பாடினார். அவர் பாடிய பாடலின் இறுதி வரிகள் ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ என முடிவுற்றது. திருஞான சம்பந்தர் பாடிய கோளறு பதிகம் எனும் திருமுறைப்பாடல் கோள்களின் தீவினையை அறுக்க பாடப்படுவதாகும். அதன்படி இந்தியாவின் சாபமாகிய அந்நியர் ஆட்சி நீங்கி நல்லாட்சி நடைபெற வேண்டும் எனும் எண்ணத்தில் அப்பாடல் அங்கு பாடப்பெற்றது" என்று கூறினார்.
மேலும் இது பற்றி 2021 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தகவல் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் "இது சோழர்கால செங்கோல்" என்றும் "பண்டைய காலத்தில் சோழர்களுக்கு முடிசூட்டிய திருவாவடுதுறை ஆதீனமே நேருவிற்கும் முடிசூட்டினர்" என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம் "சோழர்கால ஆட்சியின் இறுதி கட்டத்தில்தான் ஆதீனங்கள் தோன்றின. எனவே ஆதீனங்கள் சோழர்களுக்கு எப்படி முடிசூட்டியிருக்க முடியும்" என்று சிலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். ஒரு சிலர் "இப்படி ஒரு செங்கோல் கொடுக்கப்பட்ட நிகழ்வே கட்டமைக்கப்பட்ட பொய்" என்றும் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆனால் இவையெல்லாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்படுவதை பாதிக்க போவதில்லை.
நடுநிலை வகிக்குமா செங்கொல்?:
தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த செங்கோல் டெல்லி கொண்டு செல்லப்பட்டு புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் விழாவில் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இதனை சபாநாயகரிடத்தில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், இந்த செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும். இது நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் சபாநாயகர் நடுநிலைமையை கடைபிடிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக வைக்கப்பட இருக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நடுநிலையை பின்பற்றுவதில்லை என எதிர்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை வைத்து வருகின்றன. கடந்த நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் 'ராகுல் காந்தி லண்டனில் பேசியதை கண்டித்து' பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். இதுவரை எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் ஒரு ஆளும் கட்சியே நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கியது வரலாற்றில் இதுவே முதல்முறை. ஆனால் இந்த சம்பத்தின்போது சாபாநாயகர் இதை கட்டுப்படுத்தவில்லை என எதிர் கட்சிகள் குற்றச்சாட்டை வைக்கின்றன.
மேலும், அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் "அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளப் படவில்லை. இது போன்ற சம்பவங்கள் நாடாளுமன்ற சபாநாயகரின் நடுநிலைமை மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்படுகிறது.
மேலும், 2019ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இயற்றப்படும் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்படுவதில்லை என்றும் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முறையாக விவாதிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல்கள் நெறிக்கப்படுகிறது, புதிய கட்டிடத்திலாவது எதிர்க்கட்சியினரின் ஒலிபெருக்கி தடை செய்யபடாமல் பேசவைக்கப்படுமா?" என்று சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ஒருவர் கூட கேள்வி எழுப்பியிருந்தார்.
இப்படியான சூழலில், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருப்பது சோழர்கால செங்கோலா? அல்லது ஆதீனத்தின் செங்கோலா? என்ற விவாதத்தை கடந்து இந்த செங்கோல் நாடாளுமன்ற விவாதங்களில் நடுநிலைமை வகிக்க போகிறதா? என்பதே அரசியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதியதாக கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் போது அந்த செங்கோல் மேலும் புகழ்பெறும். ஒருவேளை நடுநிலையை காக்க தவறி விவாதிக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டால் அது செங்கோலாக இல்லாமல் தங்க முலாம் பூசப்பட்ட கைத்தடியாகவே மக்களால் கருதப்படும்.
-ச.பிரபாகரன்.