ஃபுட்போர்ட் அடித்த மேயர்...சர்ச்சையான வீடியோ...விளக்கமளித்த ப்ரியா!

ஃபுட்போர்ட் அடித்த மேயர்...சர்ச்சையான வீடியோ...விளக்கமளித்த ப்ரியா!

முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்ற மேயர் ப்ரியா அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்:

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுவடைந்து மாண்டஸ் புயலாக உருமாறியது. இந்த புயலின் தாக்கத்தால் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டது. அதன்படி சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தொங்கியபடி பயணம் செய்த ப்ரியா:

அப்போது அவருடன் சென்ற சென்னை மேயர் ப்ரியா, முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தார். அவருடன் இணைந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் முதலமைச்சர் வாகனத்தில் ஏறி தொங்கியபடி பயணம் செய்தார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மேயர் பொறுப்பில் இருக்கும் ப்ரியாவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் வாகனத்தில் தொங்கியபடி சென்றது அவர்களே தப்புக்கு உதாரணமாக செயல்படுகின்றனர் என பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படிக்க: 7வது முறையாக ஆட்சி...2 வது முறையாக முதலமைச்சர்...கோட்டையை விடாத தாமரை...!

விளக்கமளித்த ப்ரியா:

இந்நிலையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றது ஏன் என்பது குறித்து மேயர் ப்ரியா விளக்கமளித்துள்ளார். அவர் பேசும்போது, “காசிமேட்டில் இரண்டு இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. ஒரு இடத்தில் ஆய்வு முடிந்ததும், மற்றொரு இடத்தில் ஆய்வு நடத்த முதலமைச்சர் சென்றார். அதற்குள் முன்னாடி நான் செல்ல வேண்டும் என்பதால் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது, கான்வாய் வந்து கொண்டிருந்ததால் அதிலேயே ஏறி போயிடலாம் என்று யோசித்து தான் அவ்வாறு சென்றேன். அதே சமயம் கான்வாயில் அவ்வாறு செல்லுமாறு யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள மேயர் ப்ரியா, ஆனா, இது இவ்வளவு சர்ச்சையாகும் என தான் நினைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக பார்க்க வேண்டும்:

இதற்கு முன்னதாக விளக்கமளித்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் ப்ரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.