100 நாள் வேலைத்திட்டமா..? 100 நாள் கொள்ளைத் திட்டமா..? தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் ரூ.245 கோடி முறைகேடு..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 935 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பது அம்பலமாகியுள்ளது. இதில் 245 கோடி ரூபாய் முறைகேட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டமா..? 100 நாள் கொள்ளைத் திட்டமா..? தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் ரூ.245 கோடி முறைகேடு..

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பற்றவர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் கொண்டு வரப்பட்டதுதான் நூறு நாள் வேலை திட்டம். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனைத்து கிராம புறங்களிலும் ஏராளமான மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதற்காக மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கி வருகிறது.

அதன்படி 2017 -18 நிதியாண்டில் 55 ஆயிரத்து 659 கோடி நிதியை தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதன்பிறகு ஆண்டு தோறும் படிப்படியாக நிதி உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 405 கோடி ரூபாய் நிதி மாநிலங்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து சுமார் 935 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சமூக தணிக்கை குழுவின் தணிக்கையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2 லட்சத்து 65 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட தணிக்கையில் இத்தகைய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 245 கோடி ரூபாய் முறைகேட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களை காட்டிலும் அதிகப்படியான ஆட்களுக்கு சம்பளம் வழங்கியது, வேலைக்கு தேவையான பொருள்களை அதிக விலைக்கு வாங்கியது, லஞ்சம் கொடுத்தது என பல வழிகளில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதில் 239 கோடி ரூபாய் முறைகேட்டுடன் ஆந்திரா 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.