பிரபஞ்சத்தின் அதிசயம்.. பெண்…சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்...!

பிரபஞ்சத்தின் அதிசயம்.. பெண்…சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்...!

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் மார்ச் 8. இந்த நாளின் சிறப்பு என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

உலகின் அதிசயம் மனித இனம்  என்றால் பிரபஞ்சத்தின் அதிசயம் பெண் இனம் என்றே கூறலாம். மென்மையும், வலிமையும் ஒருங்கே காணப்படும் ஒரு படைப்புதான் பெண்மை.. என்னதான் படைப்பில் அனைவரும் சமம் என்றாலும் பெரும்பாலான உலக சமூகம் அவளுக்கு சமமான இடத்தை வழங்கியிருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாக இருந்திருக்கும்.  ஆனால் சமூகம் அவளுக்கு சமமான இடத்தை  வழங்கினாலும், வழங்காவிட்டாலும் அவளுக்கு ஆணை விட உயர்ந்த இடத்தையே இயற்கை வழங்கி உள்ளது.

அன்பை பொழிந்து அந்த சூழலையே அன்பு நிறைந்ததாக மாற்றுவதனாலும், திறமை நிறைந்த சூழலில் தன்  திறமையை ஜொலிக்க செய்வதாக இருக்கட்டும், பிறரின் திறமையை பட்டை தீட்டுவதாக இருக்கட்டும், அச்சம் நிறைந்தவர்களுக்கு தைரியம் தருவதானாலும், தெளிவான எண்ணங்களை பரவ செய்வதாக இருந்தாலும், இப்படி, அறிவு, கல்வி, ஆரோக்கியம், ரசனை நற்சிந்தனை,  தொலை நோக்குப் பார்வை என பலப்பல உணர்வுகள் கலந்த சூழலை உருவாக்க வல்லவள் பெண்.

ஒரு மழையோ, புயலோ, வெயிலோ, காற்றோ எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஏனெனில், அது இயற்கை, அதனுடன் இயைந்துதான் வாழ வேண்டும். அதை மாற்ற முடியாது. அதுபோலவே பெண்ணும் ஒரு இயற்கை சக்தி. ஒரு பெண்ணால் சூழலை தன் அன்பு மழையால் செழிக்க செய்யவும், கோபம் எனும் புயலால் சுழற்றி எடுக்கவும், வெறுப்பின் நெருப்பால் தகிக்க செய்யவும், கல்வி அறிவால் சிறக்க செய்யவும்,  கருணையின் நிழலில் வாழ வைக்கவும் முடியும். பெண் இயற்கை சக்தியை ஒத்த குணாதிசயங்கள் கொண்ட ஒரு ஒப்பற்ற பிறவி.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட தாய்நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. அதே போல இயற்கையையே பெண்ணோடுதான் ஒப்பிடப்படுவதுண்டு. நதிகள், மலைகள், நிலம், நீர், நெருப்பு என அனைத்துக்குமே பெண்கள் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்கிற மூடத்தனத்தை மூட்டை கட்டி பரணில் போட வைக்கும் அளவுக்கு பெண்கள் இன்று சாதனை புரிந்திருக்கின்றனர். 

பெண்களைப் போற்றும் விதத்தில் உலகம் முழுவதும் பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவனின்றி அணுவும் அசையாது என்கிற வார்த்தை அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமோ? முடியாதோ? ஆனால் பெண் இன்றி இங்கு அணுவும் அசையாது என்பது ஆணித்தனமான உண்மைதான். ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் மார்ச் 8.  

மகளிரால் இந்த உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகளிரால் இந்த உலகின் உயிர்கள் போற்றி வளர்க்கப் பட்டுள்ளன, போற்றி வளர்க்கப் படுகின்றன. ஒருவரின்  குடும்பத்தின் உணர்வு மயமான சூழல்   பெரும்பாலும் ஒரு பெண்ணால்தான் நிர்ணையிக்கப்படுகிறது.   எனவே, பெண்ணுக்கு உரிய  உரிமைகளும் மரியாதையும் தரப்படுவதுதான் தர்மமாகும். ஆதலால் "மகளிர் போற்ற விரும்பு" என்பது எந்த சூழலுக்கும் பொருந்தும்..!

அன்று முதல் இன்று வரையிலும் பெண்களின் உணர்வுகளுக்கு ஆண்கள் மதிப்பு கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். உடலைக் கொல்வது மட்டுமே கொலை என்றாகி விடாது, உணர்வுகளைக் கொல்வதும் கொலைக்கு சமம்தான். தாயாக, தங்கையாக, மனைவியாக, தோழியாக என உன்னத உறவுகளாய் நம்முடன் பயணிக்கும் பெண்மையை மதித்துப் போற்றுவோம்.. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் கால்பதித்து வரலாறு படைத்து வரும் பெண் இந்த பிரபஞ்சத்தின் அதிசயம் என்பது மறுக்க முடியாத உண்மை.