1991 போல..! திமுகவிற்கு மிரட்டல் விடுத்த எச்.ராஜா..!

1991 போல..! திமுகவிற்கு மிரட்டல் விடுத்த எச்.ராஜா..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், 1991 இல் நடந்தது போல நடக்கும் என எச்.ராஜா மிரட்டல்.

பிஎப்ஐ தடை:

தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி இருந்தனர். இச்சோதனைகளின் போது 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று மத்திய அரசு இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவித்தது.  

மேல்முறையீடு:

தடையை தொடர்ந்து இந்த அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் தடையை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மேலும் படிக்க: பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன நோக்கத்துடன் இது செயல்படுகிறது? 

எச்.ராஜா பதிவு:

தமிழ்நாட்டிலும் பிஎஃப்ஐ அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "1991 ல் எல்.டி.டி.ஈ க்கு அரசு தகவல் கசிய விட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. எனவே தற்போது தடை செய்யப்பட்டுள்ள PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணை யாக நடப்பது தமிழக அரசிற்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை PFI க்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார் மீது நடவடிக்கை தேவை" என வலியுறுத்தி உள்ளார்.

பாஜக vs திமுக:

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதே தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் எனக் கூறி வரும் வேளையில், எச்.ராஜா திமுக ஆட்சியை கலைப்போம் என கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் பெண்கள் போராட்டம்…பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடைக்கு எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு:

1989 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றது. மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 13 பேர் சென்னையில் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக புகார் கூறப்பட்டது.

1991 ஆட்சி கலைப்பு:

1990-91-ம் ஆண்டு பிரதமராக சந்திரசேகர் இருந்த போது அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. திமுகவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசின் ரகசியங்களை திமுக அரசு கசியவிட்டது என கூறி அரசியல் சாசனம் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1991-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தான் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.