உயிர் காக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் :  மழையிலும், வெயிலிலும் வீணாகும் அவலம் !

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல், கடந்த ஓராண்டாக, மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது. 

உயிர் காக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் :  மழையிலும், வெயிலிலும் வீணாகும் அவலம் !

கடந்த ஒருவருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் வகையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தீவிர முயற்சி மேற்கொண்டு, 
ஆக்சிஜன் சீராக கிடைக்க வழிவகை செய்தார்.

 

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் ஓராண்டிற்கு முன்பு சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெளிநாட்டிலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டு  வழங்கப்பட்டது. 

மேலும் அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை வைப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் மருத்துவமனை வளாகத்திற்குள் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டவும் ஆணை வழங்கப்பட்டது.  ஆனால் ஒரு வருட காலம் ஆகியும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் நிறுவப்படாமல் மழையிலும், வெயிலிலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி வீணாகி வருகிறது. 

மேலும் கட்டிடம் கட்டும் பணியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன், பல உயிர்களை பாதுகாக்க உதவிம், ஆக்சிஜன் செறிவூடும் இயந்திரங்களும் முறையான பாதுகாப்பு இன்றி வீணாகி வருகிறது. 

எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு சென்று சேர்ந்தால் மட்டுமே அத்திட்டம் முழுமை பெறும். அந்த வகையில், பல உயிர்களை காப்பாற்ற உதவும் இந்த ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை உடனடியாக நிறுவி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே  சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.