விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனவும் விரைவில் அவர் வெளிப்படுவார் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கிளர்கள் பிடியில் இருந்த ஈழதமிழர்களை காப்பாற்றுவதற்காக போராடியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இந்த போராட்டத்தின் போது இலங்கை இராணுவத்தால் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இவர் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகமலே இருந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேசிய அவர், பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறிய நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் குடும்பத்துடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், அவர் விரைவில் வெளியே வருவார் எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தொடர்ந்து, இது குறித்த அறிக்கையையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார்.
ஆனால், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை இராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும், 2009 மே 18 ஆம் தேதி பிரபாகரனை இறுதிக்கட்ட யுத்தத்தில் கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.