க்ரைம் த்ரில்லர் படங்களை மிஞ்சும் அளவிற்கு கோட நாடு வழக்கு.. மர்ம முடிச்சுகள் அவிழுமா..? 

க்ரைம் த்ரில்லர் படங்களை மிஞ்சும் அளவிற்கு கோட நாடு வழக்கு.. மர்ம முடிச்சுகள் அவிழுமா..? 

ஜெயலலிதாவை சுற்றி நெருக்கமாக இருந்த யாரும் அவருக்கு விசுவாசமாக இல்லை என்பதற்கான மற்றொரு உதாரணம் தான் கொட நாடு எஸ்டேட் கொள்ளை,கொலைகள்.

ஜெயலலிதா மரணப்படுக்கையில் அப்போலோவில் இருந்த போதே ஜெயலலிதாவின் சாம்ராஜ்யத்தில் இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டு, தாங்கள் ஏவப்பட்டதாக சொல்கிறார் சியான். 

ஜெயலலிதா வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையில் அடையாளச் சின்னமான சொகுசு பங்களாவும், கொட நாடு எஸ்டேட் கொள்ளை, கொலைகளும் அவரது மரணம் போலவே மர்மமாக பக்கமாக மாறி அச்சுறுத்துகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, கொடநாடு எஸ்டேட் எவ்வளவு பெரிய அதிகாரப்பீடமாக இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இடத்தில், அதிமுக ஆட்சி நடக்கும்போதே, கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது என்றால் அது வெறும் சாதாரண கொள்ளை மட்டும் இல்லை. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. அதில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் என்ன, ஆவணங்கள் என்ன என்பதுதான் மர்மமாக இருக்கிறது. 

அந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து இறந்து போனதற்குப் பின்னால் மிகப்பெரிய சதியே நடந்திருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவில்லாமல், இத்தனை பெரிய கொடூர சம்பவங்கள், உயிரிழப்புகள் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. அந்த வழக்கை அவசரஅவசரமாக முடிப்பதற்கு, அதிமுக ஆட்சியில் காட்டப்பட்ட ஆர்வமும் வேகமும்தான் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த வழக்கை எப்போதோ முடித்திருப்பார்கள். அதில் சந்தேகத்தை வலுப்படுத்துவது என்னன்னா? ஐ விட்னஸ் பங்களா காவலாளி கிருஷ்ண பகதூர், லீவ் போட்டு சொந்த ஊரான நேபாளத்துக்குச் சென்றிருக்கிறார். ஆனால் இன்னும் திரும்பி வரவேயில்லை. அவர் எங்கே போனாரென்றே யாருக்கும் தெரியவில்லை. அவரைத் தேடி நேபாளத்துக்கு, தமிழக போலீஸிலிருந்து ஒரு சிறப்புப்படை கூட அனுப்பப்பட்டது. அவர்கள் அங்கு போய் சல்லடை போட்டுத் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கை முடிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு முக்கிய காரணம். சசிகலா தரப்புதான், அவரைத் தப்பிக்க வைத்து, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாக அமமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... அம்மா அம்மா என மூச்சுக்கு மூச்சு நெஞ்சை நக்கும் அதிமுக தலைகள் அம்மாவின் மரணத்தை கமிசன் போட்டு ஊத்தி மூடியாயிற்று. ஆட்சி அதிகார பலத்தால் அம்மாவின் சொகுசு பங்களாவில் நடந்த கொள்ளை,கொலைகள் பற்றிய உண்மைகள் வெளியான போதும் தண்டனையில் இருந்து தப்ப முடிந்தது. பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கிவிடுவான்.. கோட நாடு கொள்ளை,கொலையில் நடந்த உண்மை என்ன..?

அந்த கொட நாடு எஸ்டேட் பங்களாவில் தான் பல ரகசிய ஆவணங்களை வைத்திருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அந்த ரகசிய ஆவணங்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் போல நடித்து தனக்கு துரோகம் இழைத்தவர்களாக கருத்தியவர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களையும், மன்னிப்பு கடிதங்களையும் அவர் ரகசியமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. ஆகவே, அதை கைப்பற்றவும் எதிர்கால அதிமுக என்ற கட்சியின் லாகானை தன் வசம் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கும் ஒருவர் தான் இதை தூக்க துணிந்திருப்பார்.

அந்த பேரெழில் பிரமிக்க வைக்கும் அந்த எஸ்டேட்டிற்குள் சென்றவர்கள் – அல்லது அனுப்பப்பட்டவர்கள் – அங்கு நகைகளையோ, பணத்தையோ எடுக்கவில்லை. அதற்கான குறைந்தபட்ச தேடுதல் கூட அவர்களுக்கு இல்லை.

அவர்களை திருட அனுப்பியவர்கள் சொல்லிக் கொடுத்தது போல, அங்குள்ள 99 அறைகளில் சரியாக செல்ல வேண்டிய அறைக்குள் நுழைந்து, எடுக்க வேண்டிய ஆவணங்களை எடுத்தற்கு மேலாக வேறு ஒன்றுமே செய்யவில்லையே. சாதாரண கார் டிரைவர் கனகராஜுக்கும், சயானுக்கும் அந்த ஆவணங்கள் எந்த விதத்திலும் யூஸ் ஆகப் போவதில்லை.

அவர்கள் நுழையும் போது எப்போதுமே தங்கு தடையில்லாமல் மின்சாரம் உள்ள அந்த இடத்தில் சரியாக மின்தடை ஏற்படுகிறது. அதேபோல 28 சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் செயல் இழக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் வெறிச்சோடிய அந்த பங்களவிற்கு சுமார் ஐம்பது காவல் துறையினரை நிறுத்தி இருந்தார்களே.. , அவர்கள் அன்று இரவு என்ன ஆனார்கள்? இதை எல்லாம் கொள்ளை அடிக்கச் சென்றவர்களுக்கு சாதகமாக இவ்வளவு துல்லியமாக செய்தவர் யார்? இதை செய்வதற்கான வசதிகளும், அதிகாரப் பின்புலமும் உள்ளவர்கள் மட்டுமே இவ்வளவு தெளிவாக செய்ய முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவையும் தங்களை ஏவியவர்களுக்காக செய்த அந்த எளியவர்கள் அடுத்தடுத்து ஏன் கொல்லப்பட வேண்டும்.

இந்த கொள்ளைக்கு பிறகு எடப்பாடியின் சகோதரரை பார்த்துச் சென்ற கனகராஜ் சாலை விபத்தில் கொல்லப்படுகிறார். அதே தினம் சயானை கொல்ல நடந்த முயற்சியில் அவர் படுகாயமுடன் தப்பிக்கிறார். அதே சமயம் அவரது மனைவியையும், மகளையும் பறி கொடுக்கிறார். கோட நாடு பங்களாவில் சி.சி.டிவி கேமாராக்களை ஆபரேட் செய்யும் தினேஷ் மர்மமான முறையில் இறக்கிறார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது உடலும் கூட கிடைக்கவில்லை.

இந்த குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி சயான் தன் ஆசைக்குரிய மனைவியையும், அன்புக்குரிய மகளையும் இழந்து தனித்துவிடப்பட்ட  நிலையில் தானும் கொல்லப்படலாம் என்ற சூழலில் தான், என்ன நடந்தாலும் சரி உண்மைகளை உலகிற்கு சொல்லிவிடலாம் என தவித்து தேடுகிறார் ஒரு நேர்மையான பத்திரிகை ஆசிரியரை. அவருக்கு தெரிய வருகிறது. தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியரான மாத்யூ சாமுவேல் துணிச்சலானவர். அவரை நம்பி சொன்னால் அதை உலகிற்கே தெரியப்படுத்துவார். நமக்கும் பாதுகாப்பு அளிப்பார் என சென்றார். அந்தப்படியே மாத்யூ சாமுவேலும் பல தடைகளைக் கடந்து. எதிர்ப்புகளை சமாளித்து இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.அதற்குப் பிறகும் கூட தமிழக ஊடகங்களோ, அகில இந்திய ஊடகங்களோ இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பது தான் துர் அதிர்ஷடம்.

சாமார்த்தியம், சாதுரியமும் மட்டுமே ஒருவரை தொடர்ந்து காப்பாற்றிவிட முடியாது.

ஆட்சி அதிகார பலத்தாலும்,மத்திய ஆட்சியாளர்களுக்கு செய்த அடிமைச் சேவகம் காரணமாகவும் எடப்பாடி இது நாள் வரை தப்பித்து வந்தார். தன்னிடமுள்ள அபரிதமான பணபலத்தால் எந்த குற்றத்தையும் செய்யலாம் என எடப்பாடி நம்பினார். யானைக்கும் அடி சறுக்கும்.

ஆட்சியில் இருக்கும் போது தன்னை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி யாரும் ,பேசவோ எழுதவோ கூடாது என நீதித் துறையையே கூட தனக்கு சாதகமாக திருப்பினார். அதே நீதித்துறை அவர் விவகாரத்தில் ஆட்சி மாறியதும் காட்சி மாறி இன்று வழிவிட்டு நிற்கிறது. எடப்பாடி, தான் கைது செய்யப்படுவோம் என்றதும் பதறுகிறார். தமிழக மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் துடிக்காத அவர் தனக்கு ஒன்று என்றவுடன் போராட்டத்தில் இறங்குகிறார். ஸ்டாலின் சரியாகத் தான் சொன்னார். மடியில் கனமில்லை எனில் வழியில் பயப்படுவானேன்…?

ஜெயலலிதா வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையில் அடையாளச் சின்னமான கொட நாடு எஸ்டேட்டும், பங்களாவும் அவரது மரணம் போலவே பல மர்மங்கள் நிறைந்த பக்கங்களாகவே மாறி நிற்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நீலகிரியின் கடைக்கோடியில் இருக்கிறது கொடநாடு காட்சி முனை. அங்கிருந்து பார்த்தால், சமவெளியில் வளைந்து நெளிந்து செல்லும் மாயாறு மனதை மயக்கும்; தெங்குமரஹடா கிராமத்தின் பேரெழில் பிரமிக்க வைக்கும். இதமான குளிர், அழகான சூழல் அங்கு செல்லும் யாரையும் அவ்வளவு எளிதில் நகரவிடாது. 

அந்தக் காட்சி முனைக்குச் சற்று முன்பு இருபுறமும் பச்சைப் பசேலென்று பரந்து விரிந்திருக்கும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்த வளம் கொழிக்கும் எஸ்டேட்டும்,அதில் சகல வசதிகளுடன் அரண்மனைகளை விஞ்சும் வண்ணம் எழுப்பட்ட மிகப் பிரம்மாண்ட பங்களாவும் இன்று பயன்படுத்த யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. அவருடன் நெருக்கமாகவும், தளபதிகளைப் போலவும் இருந்த சசிகலாவும் கூட ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இல்லை என்பது அவர் மரணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு – அதாவது அவர் அப்பல்லோவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில் – இந்த திட்டம் தீட்டப்பட்டு இவர்கள் ஏவப்பட்டதில் இருந்து தெரிய வருகிறது. அந்த காலகட்டத்தில் சசிகலாவின் முழு நம்பிக்கைக்கு உரிய தளபதியாக எடப்பாடி பழனிச்சாமி தான் இருந்தார்.

ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக கொடநாட்டை அணுவணுவாக அறிந்து வைத்திருந்த ஒருவர் உண்டெனில் அது அவரின் அன்பு தங்கை சசிகலா தான். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அங்கு ரெய்டு நடத்தப்பட்ட போது கூட சசிகலாவிடம் தான் அனுமதி வாங்கப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த கொலை,கொள்ளைகள் குறித்து இது வரை ஏன் இதுவரை சசிகலா வாய் திறக்கவில்லை? ஏன் அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கோபம் வரவில்லை. தானும் தன் உடன் பிறவா சகோதரியுடன் சுற்றித் திரிந்து, சுகித்துக் கிடந்த அந்த சொர்க்கபுரிக்குள் நடந்த எந்த அநீதிகள் பற்றியும் ஏன் சசிகலா வாய் திறக்கவே இல்லை. இதற்கான விடை எடப்பாடிக்கு மட்டுமே தெரியும் என்கிறது.

க்ரைம் த்ரில்லர் படங்களை மிஞ்சும் அளவிற்கு இப்படியான கொள்ளையும் அதைத்தொடர்ந்து நடந்த தொடர் கொலையில் மர்மமே முடிச்சு அவிழ்ந்தால் பல தலைகள் சிறைக்கு செல்வது உறுதி சொல்கிறது மீடியா வட்டாரம்.