ஒரு டிஐஜிக்கே இந்த நிலைமையா? உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்…  

வடமாநில டிஐஜி எனக்கூறி கெத்தாக ஊர் சுற்றிய நபர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பமாக,  ஆண் நண்பரை காப்பாற்ற பெண் காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி டிஐஜியை  பெண் காவல் ஆய்வாளர் ஏன் காப்பாற்ற முயன்றார்? இதுகுறித்து விளக்குகிறது செய்தி தொகுப்பு...

ஒரு டிஐஜிக்கே இந்த நிலைமையா? உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்…   

நாகப்பட்டினம் புதிய கடற்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 24 ம் தேதி காரில் வந்த நபர் பொருட்கள் வாங்கினார். அதற்கு கேசியர் பணம் கேட்டதற்கு காரில் வந்து வாங்கிகொள்ளுங்கள் என திமிராக பதில் கூறிய நபர், தான் மகேந்திரவர்மா, குஜராத் டிஐஜி என மிரட்டல் தொணியில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

அதுக்குபிறகு  நாகை பெண் காவல் ஆய்வாளரை கூப்பிட வா என பேசி அவரையும் வம்பில் இழுத்துவிட்டார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்ற பழமொழி போல் வாயை கொடுத்து வசமாக மாட்டிகொண்டார் குஜராத் டிஐஜி மகேந்திர வர்மா... அதில் சந்தேகமடைந்த விக்னேஷ்வரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குஜராத் டிஐஜி மகேந்திர வர்மா என்ற பெயரில் சுற்றிவரும் ஆசாமியை தேடி வந்தனர். சனி உச்சத்தில் இருந்ததால் என்னமோ,  அதே நபர் மீண்டும் கடந்த  28ம் தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும்  ரவி என்பவரிடம் காரில் வந்து ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றார். மீண்டும் போலீசுக்கு தகவல் வரவே ஒருவேளை இரண்டு நபருமே ஒரே ஆளாக இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ஒரே ஆள் என தெரியவந்தது.

இந்நிலையில்  நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நிற்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரிடம் நடத்திய சிறப்பு விசாரணையில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கவிதா என்பவரிடம்  ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் தன்னையும் ஒரு இன்ஸ்பெக்டராக நினைத்து கொண்டு கெத்தாக உலா வந்ததும் தெரியவந்தது.

ஆழ்மனதில் தன்னை ஒரு இன்ஸ்பெக்டராக நினைத்தவர் தன்னுடைய மகேஷ் என்ற பெயரை சினிமா படங்களில் வருவது போன்று மகேந்திரவர்மா என மாற்றி கொண்டார்.  நாளடைவில் மகேஷ் மகேந்திரவர்மனாக மாறி நின்ற நிலையில் நடை உடை பாவனை பேச்சு என அனைத்தையும் போலீஸ் ஸ்டைலில் உருமாற்றம் அடைந்தார்.

ஒரு படி மேலே போய் தன்னை கவிதாவின் கணவர் என்றும் காரில் டிப்டாப்ஆக உடை அணிந்து கொண்டு நாகையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுப்பட்டு ஜாலியாகவும் கெத்தாவும் வலம் வர தொடங்கியுள்ளார். மேலும் காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி மகேந்திரவர்மா மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எப்படி இருந்தாலும் படம் முடிந்து தானே ஆகவேண்டும்... இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரவர்மா என்கிற மகேஷ் கைது செய்தனர்.

இந்த கதையில் பெரும் டிவிஸ்டாக பெண் காவல் ஆய்வாளர், மகேந்திரவர்மா தனது கணவர் என்றும், யார் என நினைதீர்கள், அவர் ஒரு டெல்லி சிபிஐயில் பணியாற்றும் டி.ஐ.ஜி என்றும், ஒரு டி.ஐ.ஜி யை காவல் நிலையத்துக்கு அழைக்கிரீர்களா? என்று மிரட்டும் தொனியில் உரையாடும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய் என இருவரும் விசாரணை வலையத்துக்குள் சிக்கியுள்ளனர்.