புகழேந்தி, துரைமுருகன் ரெண்டுபேரோட பேச்சை கவனிச்சீங்களா? அதிமுகவுக்கு எதிரா பெரிய பிளான் நடக்குதா?

புகழேந்தி, துரைமுருகன் ரெண்டுபேரோட பேச்சை கவனிச்சீங்களா? அதிமுகவுக்கு எதிரா பெரிய பிளான் நடக்குதா?

ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருவரும் அதிமுகவில் சிறைக்கு செல்ல உள்ளவர்கள் யார் என்பது குறித்து ஒரே போல் பேசி இருப்பது சற்று கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகியுள்ளது. 

அதிமுக - திமுக:

அதிமுக, திமுக மோதல் என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான் என்றாலும் தற்போது நடக்கும் வார்த்தை மோதல் என்பது சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக அதிமுக இடைகாலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாகவே முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து ஒருமையிலும், தடித்த வார்த்தைகளை உபயோகித்தும் சாடி வருகிறார். திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என கிடைத்த நேரத்தில் எல்லாம் எதிர் கட்சியினரை வசை பாடுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை எனக்காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஓபிஎஸ் ப்ரசண்ட் - ஈபிஎஸ் ஆப்சண்ட்... ரிப்பீட்டு...தொண்டர்கள் அப்செட்..

திமுகவின் அரசியல் நகர்வு:

ஆட்சிக்கு வரும் முன்பே, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் முன்வைத்தது, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் நிரூபிக்கப்படும் என்பதே. அதற்கு ஏற்றார் போலவே திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் என அனைவரின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. மிக முக்கியமாக நாமக்கல் அதிமுகவின் முக்கிய பலமாக பார்க்கப்படும் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

ஓபிஎஸ் vs இபிஎஸ்:

ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து தங்களுடைய ஆதவாளர்களுடன் தொண்டர்களை தன் வசப்படுத்தும் வேலைகளை செய்து வருகின்றனர். ஒரே அணியில் இருந்தவர்கள் எதிர் அணிகளான பின்னர், மற்றவர்களின் குற்றங்களையும், ஊழல்களையும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததை மறந்திருக்க முடியாது.   

புகழேந்தி கூறியது என்ன?

ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எதிர் அணியினரைக்குறித்து கூறி இருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஊழல் வழக்கில் சிறை செல்ல போகும், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணியால் எப்படி அதிமுகவை வழி நடத்த முடியும் என கூறியுள்ளார். எதிர் அணியினரை சாடுவது என்பது சாதாரணமானது என்றாலும், திமுக அமைச்சர் துரைமுருகனின் பேச்சு, புகழேந்தியின் கருத்தின் மீது அதிக கவனம் பெறச் செய்துள்ளது.

துரைமுருகன் கூறியது என்ன?

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 அன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் சுதந்திரதினத்தை குடியரசுதினம் என கூறியது பேசுபொருளாகியது. இது ஒரு புறம் இருந்தாலும் அவரின் பேச்சில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது அதிமுக அமைச்சர்கள் குறித்து பேசியது தான். 

“போதை பொருள் தடுப்பிற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அதிமுக பதறுகிறது. ஏன் என்றால், குட்கா பான்மசாலா வழக்கில் விரைவில் அதிமுகவினர் உள்ளே செல்ல போகிறார்கள் அதனால் அவர்கள் பதறுகிறார்கள் அவர்களுக்கு தான் இதில் மாட்டியவர்கள் யார், யார் உள்ளே செல்ல போகிறார்கள் என்பது தெரியும்” என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: யப்பா!! இது சுதந்திர தினம் இல்லையாம், குடியரசு தினமாம் பா!!!- அமைச்சர் துரைமுருகன்!!!

ஓபிஎஸ் + திமுக?

ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தியும், திமுக அமைச்சரான துரைமுருகனும் ஒரே கருத்தை கூறி இருப்பது, ஓபிஎஸ், திமுகவுடன் இணைந்து இபிஎஸ்ஸை வீழ்த்துவதற்கான திட்டம் வகுகிறாரோ எண்ணற்ற சந்தேகத்தை இபிஎஸ் ஆதரவாளர்களிடம் எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் திமுகவின் கைக்கூலியாக இருந்து வருகிறார் என ஓபிஎஸ் கூறி வருத்தும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.