அதிர்ச்சியில் உறையும் ஐ.டி ஊழியர்கள்... பணி நீக்கம் தீர்வாகுமா? 

அதிர்ச்சியில் உறையும் ஐ.டி ஊழியர்கள்... பணி நீக்கம் தீர்வாகுமா? 
Published on
Updated on
1 min read

அயல்நாட்டில் வேலை செய்பவர்களின் நிலை என்ன?

இன்றைய உலகில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது வெளிநாட்டில் உயர்கல்வி மற்றும் வேலை. அவ்வாறு அயல்நாட்டில் வேலை செய்பவர்களின் நிலை இன்று எவ்வாறு உள்ளது தெரியுமா? ட்விட்டர், கூகுள், அமேசான். மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலக பெருநிறுவனங்களின் அதிரடி ஆட்குறைப்பு 55 ஆயிரத்து 970 ஊழியர்களின் தலையில் இடி போல் விழுந்திருக்கிறது. பெருமளவு ஆட்குறைப்பு நடவடிக்கை இந்த ஜனவரியில் மட்டும் நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற பணி  நீக்கத்தின் 35 சதவீதம் இந்த ஒரே மாதத்தில் நடந்திருக்கிறது என்று சொன்னால் ஏற்க முடிகிறதா? ஆம் நடந்திருக்கிறது.ஏற்கத்தான் வேண்டும். இதுதான் கள உண்மை. 

ஐடி ஊழியர்களின் தலையில் இடிபோல் இறங்கிய ஆட்குறைப்பு :

கொரோனா பொதுமுடக்க காலக்கட்டத்தில்  மைக்ரோசாப்ட் நிறுவனம் 58 ஆயிரம் ஊழியர்களையும், அமேசான் நிறுவனம்  1 லட்சம் ஊழியர்களையும், கூகுள் நிறுவனம் 21 ஆயிரம் ஊழியர்களையும், மெட்டா நிறுவனம் 13 ஆயிரம் ஊழியர்களையும் பணி அமர்த்தியது. தற்போது உக்ரைன் ரஷ்யா போர், போரின் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கச்சா எண்ணை விநியோகம், உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக பெருநிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். கடந்த 2022ல் ட்விட்டரில்  10 ஆயிரம்  ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார் எலான் மஸ்க். அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இசை தளமான ஸ்பாடிபை தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடருமா? :

முக்கியமாக, அமெரிக்காவில்  40 சதவீதம் இந்திய மென்பொருள் வல்லுநர்கள்  வேலை இழந்து தவித்து வருகின்றனர். எச்-1பி, எல்1 விசாவில் சென்றவர்கள் என்பதால் குறிப்பிட்ட காலம் வேலை செய்ய வேண்டும். ஆனால், நிறுவனங்களின் எதிர்பாராத செயல்பாடுகளால் உடனடியாக வேறு வேலை தேட வேண்டுமென்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில்  ஆப்பிள் நிறுவனம் பெருமளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதனையும் உற்றுநோக்க வேண்டும். மேலும் பெருநிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

பணி நீக்கம் தீர்வாகாது :

பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை என்பது ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தையும், குடும்ப நலனையும் மையப்படுத்தி உள்ளது. ஊழியர்களின் நலனை பெருநிறுவனங்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதும் பணி நீக்கம் தீர்வாகாது என்பதே ஊழியர்களின் எண்ணமாக உள்ளது.

- லாவண்யா ஜீவானந்தம்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com