மறைமுகமாக ஈபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கிறாரா ஸ்டாலின்..?

மறைமுகமாக ஈபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கிறாரா ஸ்டாலின்..?

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக விசாரணை மேற்கொண்டு ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி 600 பக்கம் கொண்ட அறிக்கையை ஆறுமுகசாமி முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். இது குறித்த விவரங்கள் அமைச்சரவைக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆறுமுகசாமியின் சர்ச்சையான பேச்சு:

தமிழக அரசிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த நீதிபதி ஆறுமுகசாமி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது பல விவரங்களை தெரிவித்தார். அதில் குறிப்பாக, இந்த ஆணையத்தின் விசாரணையில் சசிகலா நேரடியாக ஆஜராகவில்லை என்றும், அதனால் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்ற தகவல் பகிர்ந்தார். இது அரசியல் வட்டாரங்களில் மிகப் பெரிய பேசுப்பொருளாக மாறியது.

அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை:

இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், ஆறுமுகசாமி தாக்கல் செய்த ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை விரிவாக  ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, விசாரணை ஆணையத்தின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன் ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்து, இது குறீத்த அறிக்கையும், ஆணையத்தின் அறிக்கையையும் சட்டப்பேரவையில் வைக்க அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

இயற்கை மரணம்: அப்புறம் ஏன் விசாரணை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணையில் எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் இயற்கையானது என ரீப்போர்ட் கொடுத்தனர். அதேபோன்று ஜெயலலிதாவை பரிசோதித்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே கொடுத்த அறிக்கையிலும் இயற்கை மரணம் என்பது தான் இருந்தது. இப்படி எல்லாவற்றிலும் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை; அவரின் மரணம் இயற்கையானது என்று வந்த போதிலும் மீண்டும் சசிகலா மீது விசாரணை நடத்துவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது ஒருவிதமான சந்தேகத்தை எழுப்பும் விதமாக இருக்கிறது.

மேலும் படிக்க: சுமார் 600 பக்கம் கொண்ட அறிக்கை...தமிழக அரசிடம் தாக்கல்...அறிக்கை சொல்ல போவது என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

சசிகலா - ஓபிஎஸ்:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பூசல் காரணமாக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸின் அழைப்பை ஏற்று சசிகலா அதிமுகவில் சேர போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.   

மறைமுகமாக ஆதரிக்கிறாரா ஸ்டாலின்:

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைவரும் ஒன்றிணைய போவதாக தகவல் வெளியாக வரும் நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தாக்கல் செய்த அறிக்கையை நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்த மு.க.ஸ்டாலின் சசிகலா உள்ளிட்ட சிலர் மீது மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரைத்தார். ஓபிஎஸ் உடன் சசிகலா இணைய போகும் இந்நேரத்தில் மீண்டும் சசிகலா மீது விசாரணை நடத்துவதற்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது பல கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது. ஒருவேளை ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைந்தால் அதிமுக கட்சி வலுவடைந்துவிடும்; அது நமக்கு ஆபத்தாகிவிடும்  என்பதற்காகவே ஆறுமுகசாமியின் அறிக்கையின் மூலம் காய் நகர்த்தி மறைமுகமாக ஈபிஎஸை ஆதரிக்கிறாரா? மு.க.ஸ்டாலின் என்ற கேள்வி அரசியல் வல்லுநர்களிடையே நிலவி வருகிறது.