ஒரே கட்சி முறையை நோக்கி நகர்கிறதா இந்தியா.....!!!!

ஒரே கட்சி முறையை நோக்கி நகர்கிறதா இந்தியா.....!!!!

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஊழல் வழக்குகள் பெருகி வருகின்றன.  விசாரணையும் ரெய்டுகளும் அன்றாட செயல்களாக மாறி வருகிறது.  நாடாளுமன்றத்தில் அதிகமான எண்ணிக்கையில் எம்.பிக்கள் வெளியேற்றப்படுவது நடைமுறையாகி வருகிறது.  இவை அனைத்தும் இந்தியா ஒரு கட்சி  நாடாக மாற வேண்டும் என ஆளுங்கட்சி எண்ணுவதான ஒரு தோற்றத்தையே மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்கள்:

இந்தியாவின் 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலங்கலின் முன்னேற்றம் குறித்த கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.  அனைத்து முக்கிய திட்டங்களின் பலன்களும் மக்களை முழுமையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய மோடி வலியுறுத்தியிருந்தார்.  பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

தந்திரமாக செயல்படும் பாஜக:

பாஜக ஆட்சியை விரும்பாத மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற சில அரசியல் தந்திரங்களை கையிலெடுத்து செயல்படுத்தி வருகிறது பாஜக. ஊழல், ரெய்டு, உட்கட்சி பூசல் போன்றவற்றின் மூலம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக.

உட்கட்சி பூசல்:

மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் மெகா கூட்டணியிலான அரசு உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது.  அவருக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழு கிளர்ச்சியில் ஈடுபட்டு உத்தவ் தாக்கரேவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தொல்வியடைய செய்தது.  பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஷிண்டே தலைமையிலான அரசாங்கம் தற்போது நடைபெற்று வருகிறது.

ஹவாலாவும் ஆம் ஆத்மியும்:

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சரவையின் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சட்ட விரோதமான பண பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.  அதற்கு பிறகு பாஜகவுக்கு எதிரான ஆம் ஆத்மியின் எதிர்ப்பு அலை அடங்கியுள்ளது.  கடந்த மாதம் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் பாஜகவின் வேட்பாளருக்கே ஆதரவு அளித்தது.

ரெய்டும் கைதும்:

மேற்கு வங்காளத்தில் பல ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  ஆசிரியர் ஆட்சேர்ப்பு நியமனத்தில் பானர்ஜி அமைச்சரவையின் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.  இதில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அமலாக்க துறை அறிவித்ததையடுத்து பார்த்தாவிற்கு எவ்வித உதவியும் செய்யாமல் பார்த்தா கைவிட்டார்.  இதனைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியையும் குடியரசு தலைவர் முர்முவையும் சந்தித்துள்ளார் மம்தா.

அண்ணாமலையும் தமிழ்நாடும்:

தமிழ்நாட்டில் தாமரையை நிச்சயம் மலர செய்வோம் என்ற உறுதியோடு எதிர்கட்சிகளோடு கூட்டணி அமைத்தது பாஜக.  ஆனால் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியையே சந்தித்தது பாஜக.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஊழல் குற்றசாட்டுகள் இருப்பதாக பயமுறுத்தியும் திமுக மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.  இதனால் திமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என தமிழக பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து பாஜக தலைமையை அறிவுறுத்தி வருகிறது.  இதனைத் தொடர்ந்து அமலாக்கதுறை விசாரணை விரைவில் தமிழ்நாட்டிலும் வரும் எனவும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.  இந்நிலையில் திமுக அமைச்சர்கள் சிலர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய கட்சியையும் விடாத ரெய்டு:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்ந்து அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது.  சில முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  இதனால் ராகுலும் சோனியாவும் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.  எதிர்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் ஆளுங்கட்சியை எதிர்த்து செயல்பட யார் இருப்பார் என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்றத்திலும்....:

நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகளை முடக்கும் செயல்களை செய்து வருகிறது மத்திய அரசு.  நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று கூறி ஒரு தொகுப்பை  நாடாளுமன்ற  மக்களவை செயலகம் வெளியிட்டு பேச்சு சுதந்திரத்தையும் பறித்தது.  அதோடு நில்லாமல் விதி 255 மற்றும் 256யை பயன்படுத்தி எதிர்கட்சி எம்.பிக்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க இடைநீக்கம் செய்து வருகிறது.

இந்தியாவின் ஒரே கட்சி பாஜக மட்டுமே:

பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் நட்டா இந்தியாவில் அரசியல் சித்தாந்தத்துடன் செயல்படும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டுமே என்று பேசியுள்ளார்.  குடும்ப கட்சிகள் விரைவில் செல்வாக்கை இழந்து விடும் எனவும் பாஜகவை எதிர்க்கும் சக்தி வேறெந்த கட்சிக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்தியாவின் ஒரே கட்சி பாஜக மட்டுமே எனவும் கூறியுள்ளார்.

ஒரே நாடு...ஒரே கட்சி...

ஒரு கட்சி முறை அரசாங்கத்தில் அரசியலமைப்பின் அடிப்படையில், ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே அரசாங்கத்தை அமைக்க உரிமை உண்டு.  சீனா, கியூபா, வட கொரியா போன்ற நாடுகளில் ஒற்றை கட்சி முறையே வழக்கத்தில் உள்ளது.

இந்தியாவும் ஒரு கட்சி முறை நாடாகுமா?

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தின.  அப்பொது பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாக பேசியுள்ளார்.  இது போன்ற தொடர் செயல்பாடுகளை பார்க்கும் போது இந்தியாவிலும் ஒரு கட்சி முறை சாத்தியமாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்த நடைமுறை பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.