பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சாதகமா...?

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடமளிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...

மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை "மகளிர் இடஒதுக்கீடு மசோதா" உறுதி செய்கிறது. ராஜீவ்காந்தி தலைமையிலான அரசு 1989-ம் ஆண்டு மே மாதம் முதன்முதலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களைவையில் தோல்வி அடைந்தது.

அதன் பின்னர் 1996-ல் பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு, அதனைத் தொடர்ந்து, வாஜ்பாய் தலைமையிலான அரசு இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மக்களவையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

அதன் பின்னர் 2008-ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 2009ம் ஆண்டில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ம் ஆண்டு மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

2010ம் ஆண்டு மாநிலங்களவையில் 186க்கு ஒன்று என்ற வாக்குகளின் அடிப்படையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டும் மக்களவையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இப்படி இந்திய நாடாளுமன்றத்தில் பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் போன இந்த மசோதா, கடந்த 13 ஆண்டுகளுக்குப்பின் தற்போது மக்களவை மற்றும்  மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவிற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இந்த மசோதாவை  எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன? இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. ஆனால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது.  

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், 78 பெண் உறுப்பினர்களும், 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், 11 பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.  பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. மகளிருக்கான இந்த இடஒதுக்கீட்டிற்குள் எஸ்.சி.எஸ்.டி மற்றும் ஆங்கிலோ - இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீடும் முன்மொழியப்படுகிறது.  

இந்த இட ஒதுக்கீட்டிற்குள் பட்டியலினத்தோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இருக்கும் எனவும், இந்த மசோதா 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதா மிக முக்கியமானதுதான். ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் நீண்ட காலமாகவே இதற்கு நேரடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், அதற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான். 

பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறது. பழங்குடியினர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், என வலியுறுத்துகிறது. 

பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டால், பெரும்பாலான இடங்களை உயர் சாதியைச் சேர்ந்த பெண்களே கைப்பற்றும் சூழல் உள்ளது. எனவே, இதில் உள் ஒதுக்கீடு தேவை என்பதே சமூகநீதியை வலியுறுத்தும் கட்சிகளின் ஒருமித்த குரலாக உள்ளது. 

ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீடு தரப்படாவிட்டால், மகளிருக்கான ஒதுக்கீட்டை உயர்வகுப்பினரே நிரப்பிக்கொண்டு விடுவார்கள் என அனைத்து கட்சிகளும் அச்சம் தெரிவிக்கின்றன. 

இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டாலும், தமிழ்நாட்டை சேர்ந்த திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எஸ் சி ,எஸ் டி ,ஓ பி சி மற்றும் சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தன.

இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டாலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமலுக்கு வராது என்றும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகே இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தருணத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தாலும், ஜாதிவாரிய கணக்கெடுப்பை நடத்தி சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில், கொண்டுவரப்படாத இந்த மசோதா, 9-வது ஆண்டு காலத்தில் கொண்டுவருவது தேர்தலுக்கான கண்துடைப்பு நாடகம் என்றும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

அத்துடன், மக்கள்தொகை அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தினால் தென்மாநில பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு குறையும் என்றும், தொகுதிகளின் அடிப்படையில் தற்போதைய நிலையை தொடர்ந்தால் மட்டுமே உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் எதிர் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  

எந்த சமூகத்தையும் ஒடுக்காமல் அனைத்து தரப்பினரையும் முன்னுக்கு கொண்டு வரும் சட்டம் மட்டுமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.....