அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?

அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?

ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அக்கட்சி தலைவர் தேர்தலில் இருந்து முதலமைச்சர் அசோக் கெலாட் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்தநிலையில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சிக்கு  நிரந்தர தலைவர் தேவை என்ற அவசியம் நிலவுவதால் வருகிற அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

தலைவர் பதவிக்கு போட்டியிடும் அசோக் கெலாட்:

அதன்படி, அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான முன்ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடுகின்றனர், இதில் காந்திக் குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அந்த பதவியில் அமர்த்தப்படுவார் என கூறப்பட்டது. அவர் தலைவரானால், கட்சியின் கொள்கை படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க வேண்டும் என்பதால் முதலமைச்சர் பதவியில் சச்சின் பைலட்https://twitter.com/SachinPilot நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

போர்க்கொடி தூக்கிய கெலாட் ஆதரவாளர்கள்:

ராஜஸ்தான் முதலமைச்சராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதும், கெலாட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய 82 எம்.எல்.ஏக்கள் பைலட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்களான அஜய் மாகென் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டத்தையும் அவர்கள் புறக்கணித்தனர்.

இதையும் படிக்க: அசோக் கெலாட், சசி தரூர் இடையே போட்டி...யார் அடுத்த காங்கிரஸ் தலைவர்?

அதிருப்தியடைந்த காந்தி குடும்பம்:

கெலாட் ஆதரவாளர்கள் பைலட்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் ராஜஸ்தான் அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் காந்தி குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளதோடு, இதுதொடர்பான விரிவான அறிக்கையை இன்று தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருக்கு அழைப்பு:

இதனிடையே தற்போது ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னையை சரி செய்ய மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத்திற்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைவர் தேர்தலில் இருந்து கெலாட் நீக்கமா?:

இந்தநிலையில் மேலிட பொறுப்பாளர்களின் பரிந்துரையை ஏற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து கெலாட் நீக்கப்படலாம் என்றும், அதற்கு பதில் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், திக்விஜய சிங் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் போட்டியிடக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தலைவர் தேர்தலால் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல்  நிலவி வருகிறது.