அதிரடி காட்டிய இறையன்பு...அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் எச்சரிக்கை!

அதிரடி காட்டிய இறையன்பு...அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் எச்சரிக்கை!

இனி வரும் காலங்களில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எச்சரிக்கை விடுத்த இறையன்பு.

இயல்பு வாழ்க்கை முடக்கம்:

சென்னையை பொறுத்தவரை கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஆங்காங்கே மழைநீர் தேங்கி சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக தோன்றியது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தமிழக அரசுக்கு பரிந்துரை:

இதையடுத்து, வருங்காலங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், மழை நீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துதல், மழை நீர் தேங்குவதை தடுத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளை வகுக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. 

சிங்கார சென்னை 2.0 திட்டம்:

அதன்படி, 1,033.15 கி.மீ. நீளத்துக்கு, 4,070.10 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அதில் சிங்கார சென்னை 2 பாய்ன்ட் ஜீரோ திட்டத்தின் கீழ் 2 பிரிவுகளாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரிவின் கீழ் 97 சதவீதம் பணிகளும், 2வது பிரிவின் கீழ் 94 சதவீதம் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எச்சரிக்கை வரும் வரை...மழைநீர் வடிகால் பணியின் கால அவகாசம் நீட்டிப்பு...சென்னை மாநகராட்சி உத்தரவு!

வடகிழக்கு பருவமழை தொடக்கம்:

இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ளது. ஆனாலும், இன்னும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடியவில்லை. சில இடங்களில் இப்போதுதான் குழியை வெட்டி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

பத்திரிக்கையாளர் உயிரிழப்பு:

ஆனால், சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் ஒருவர் மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை விடுத்த இறையன்பு:

இந்நிலையில், குன்றத்தூர், அனகாபுத்தூர், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த இறையன்பு, பணியில் உள்ள தொய்வை சுட்டி காட்டி அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். மேலும், இனி வரும் காலங்களில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.