கேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு பூங்காவாக மாற்றிய தோட்டக்கலைத்துறை...

வடசென்னையில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற்சாலை ஒன்றை தோட்டக்கலைத்துறையினர் எழில்மிகு பூங்காவாக மாற்றி அசத்தியுள்ளனர். 
கேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு பூங்காவாக மாற்றிய தோட்டக்கலைத்துறை...
Published on
Updated on
2 min read
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் 1919ஆம் ஆண்டு இராட்சத இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து, விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்த தொழிற்பேட்டை, தொழில் துறை, அதன்பின் வேளாண் பொறியியல் துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிறுத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி ஒரு புதர் மண்டிய காடு போல் கேட்பாரற்று போனது. 3 புள்ளி 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி எழில்மிகு பூங்காவாக சீரமைக்க தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்பின் நடத்தியவையோ அசத்தலான மாற்றங்கள். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புல்தரை, 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழகு செடிகள், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மண் இல்லா தாவரம் வளர்ப்பு முறை, குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், வண்ண சுவர் ஓவியங்கள் என பூங்காவை எழில்மிகு நந்தவனம் போல் மாற்றியுள்ளது.
கீரை வகைகள், இனிப்பு துளசி, செங்கீரை, பால கீரை என மூலிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரசித்து மகிழும் மக்களுக்கு கூடுதல் பரிசாக 126 இருக்கைகளுடன் கூடிய உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய பூங்காவை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பூங்காவில் நடைபயிற்சி செய்ய மாதந்தோறும் 150 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.
இயந்திரமயமான உலகில் கூச்சலுடனும், குழப்பத்துடனும் தங்களின் அன்றாட வாழ்வியலை கடந்து செல்லும் மக்களுக்கு மன அமைதி என்பது ஒரு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தற்போது பூங்கா நோக்கி படையெடுக்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த பூங்கா புத்துணர்ச்சியையும், மன மகிழ்வையும் நிச்சயம் தரும்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com