"தலைமுறைகளின் தல  நீ" கூல் கேப்டன் தோனியின் பிறந்த நாள் இன்று...

"தலைமுறைகளின் தல  நீ" கூல் கேப்டன் தோனியின் பிறந்த நாள் இன்று...

2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்து நாடு திரும்பியது.இதனையடுத்து அப்போதைய இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து அணியை கட்டமைக்க வேண்டும் என நகர்புறங்களை விடுத்து கிராம புறங்களை நோக்கி பயணம் மேற்கொண்டார். 

அப்போது கங்குலியின் தேடலின் தீர்வாய் கிடைத்தவர் தான் ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மகேந்திர சிங் தோனி2004ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் முதல் ஆட்டத்தை பங்களாதேஷிற்கு எதிராக தொடங்கிய முதல் ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனை அடுத்து இரண்டு ஆட்டங்களிலும் சோபிக்க தவறினார்.யார்யா இந்த சடையன்... இவனெல்லாம் எப்படி பெர்பாம்  பண்ண போறான் என்று ஓரிரு மாதங்களிலேயே  கிரிக்கெட் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டவர் தான் தோனி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டியில் மீண்டும் தோனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த போட்டியில் சச்சின் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்

சச்சின் ஆட்டமிழந்த உடன் தொலைக்காட்சியை ”ஆப்” செய்து சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது இந்திய ரசிகர்களின் இல்லங்கள்... ஆனால் அதற்குப் பிறகு களமிறங்கிய தோனி அடித்த அடி இடியாய் பரவி சச்சின் ஆட்டமிழந்த உடன் அணைக்கப்பட்ட டிவிகள் தோனியின் ஆட்டத்தினால் மீண்டும் ”ஆன்” செய்யப்பட்டன.

அன்று மீண்டும் தொடங்கியது  டிவிக்கள் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மற்றும் ஒரு அத்தியாயம்தான்..அதோடு இருந்து விடாமல் தோனி அடுத்தடுத்தப் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை தொடர் வெற்றி கனியை ருசிக்க வைத்தார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேற்றப்பட்டது. உலகக்கோப்பை தோல்வியை சரிசெய்ய நினைத்துக்கொண்டிருந்த இந்திய அணிக்கும், கடும் கோபத்தில் இருந்த ரசிகர்களின் காயத்தை ஆற்றும் மருந்தாக ஐசிசியின் டி20 உலக கோப்பை தொடர் அறிவிப்பு வெளியானது.

இந்தியாவின் பல முன்னணி வீரர்களும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று வந்த நேரம் அந்த அணிக்கு யார் தலைமையேற்று நடத்த போகிறார் என்ற கேள்வி மேலோங்கி இருந்தது யாரும் எதிர்பார்த்திராத வண்ணமாய் தனது உழைப்பிற்கு அங்கீகாரமாய் இந்திய அணியின் கேப்டன் என்ற கிரீடம் மகேந்திர சிங் தோனியின் தலையில் வைத்து அழகு பார்க்கப்பட்டது. 

தலையில் வைத்த கிரீடத்தை தலைகணத்துடன் எண்ணாமல் இளம் வீரர்களுடன் களம் கண்டு ஏழாவது மாதம் 7 ஆம் தேதியில் ஏழாம் எண் ஜெர்சி யுடன் 2007ஆம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பையை வென்று காண்பித்தார்.மகேந்திர சிங் தோனி.

அன்று தொடங்கியது தோனியின் சகாப்தம் காயப்பட்ட சிங்கத்தின் மூச்சு கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர் வெற்றிகளை தனது தலைமையிலான படையை வைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் பயணத்தை சரித்திர பயணமாக தொடர்ந்தார்...

இந்த காலகட்டத்தில் தோனிக்கு ஒரு முக்கிய சவாலாக அமைந்திருந்தது 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. சச்சின் டெண்டுல்கர் வீரேந்திர சேவாக் தொடங்கி அனுபவ வீரர்கள் இளம் வீரர்கள் என ஒரு வலுவான படையுடன் களம் கண்டது இந்திய அணி.

இறுதி போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி அமைத்து கொடுத்த டார்க்கெட்டை எதிர்த்து விளையாடிக்  கொண்டிருந்த இந்திய அணியின் முதல் வரிசை வீரர்கள் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.ரசிகர்களின் நம்பிக்கையின் நாயகனாய் எம்எஸ் தோனிகளம் கண்டார். அன்றைய தினம் அவர் அடித்த பந்துகள் கேமராவுக்கே தெரியாத அளவுக்கு பவுண்டரிகளை  தொட்டு தழுவி கொண்டிருந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான இறுதி ரன்களை தனது பாணியில் சிக்சரை அடித்து  28 கால இந்தியாவின் உலக கோப்பை வெற்றி எனும் தாகத்தை தீர்த்து வைத்தார் மகேந்திர சிங் தோனி.

வியர்வையால் நனைந்த ஜெர்சி யுடன் ஆடிக்கொண்டிருந்த தோனியை சச்சின் டெண்டுல்கர் கட்டித்தழுவிய காட்சிகளும் இந்திய வெற்றியை ரவிசாஸ்திரி வர்ணித்த வார்த்தைகளும் இன்றும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.

இதனைத் தொடர்ந்து  சாம்பியன் டிராபியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காண்பித்தார் தோனி, இவருடைய அசாத்திய திறமை களுக்கு பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற விருதுகள் அவர் வீட்டு வாசல் தேடி வந்தது. ஐசிசி யின் கனவு அணியில் 5 முறை கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார் மகேந்திர சிங் தோனி

தோனி தற்போது தனது ஓய்வை அறிவித்து இருந்தாலும் அவரது அதிரடி ஆட்டங்களை ரசிகர்கள் மறந்து விட மாட்டார்கள்... மகேந்திர சிங் தோனியின் புகழ் பல நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக நின்று சொல்லும், தூற்றுபவர் மத்தியில் துவண்டுவிடாமல் முளைத்தவன் நீ...
போற்றுதல் என்பது தலைக்கணம் இன்றி தன்னடக்கத்தோடு வளர்ந்தவன் நீ....
தலைவருக்கான தலைமைப் பண்பை பெற்ற தலைசிறந்த மாமனிதன் நீ....
தலைமுறைகளின் தல  நீ.....