பேசுப்பொருளாகவே இருக்கும் பாலின சமத்துவம்.... விளையாட்டுத்துறையிலிருந்து மாற்றுவோம்!!!

பேசுப்பொருளாகவே இருக்கும் பாலின சமத்துவம்.... விளையாட்டுத்துறையிலிருந்து மாற்றுவோம்!!!

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும் பாலின சமத்துவம் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.  இதில் மாற்றம் ஏற்படுமா என்றால் அதுவும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.  பெண்ணியம் என பெண்கள் பேசி வந்தாலும் அது குறுகிய வட்டத்துக்குள்ளேயோ அல்லது பலரால் ஒடுக்கப்படுவதுமாகவோ உள்ளது. பெண்களுக்கான உரிமைகள் எதுவும் இயற்கையாக அமையாதது போலவும் அதை பெண்கள் போராடி பெற வேண்டியதாகவுமே உள்ளது.

இனி வரும் சந்ததியினிரிடமாவது மாற்றத்தைக் கொண்டு வர முயல வேண்டும்.  இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியமே.  பாலினக் கல்வி என்பது அதற்கான ஒரு வழிமுறையாக இருப்பினும் விளையாட்டை அதற்கான எளிய சிறந்த வழியாக தேர்ந்தெடுக்கலாம்.  எப்படியென்றால் அதை விளக்கமாக தெளிவுப்படுத்தலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கல்வி என்பது ஆண்களுக்கு மட்டுமானதாகவே இருந்தது.  ஆசிரியரின் வீட்டில் தங்கி படிக்கும் கல்வி முறையே இருந்தது.  அதற்கு பிந்தைய காலக்கட்டங்களில் பெண்களும் கல்வி கற்கும் நிலை உருவானது.  ஆனால் ஆசிரியர் கல்வி கற்கும் பெண்களின் வீடுகளுக்கு சென்று மட்டுமே கற்று தர முடியும். ஆனால் இதையுமே வசதியான பெண்களால் மட்டுமே பெற முடிந்தது.  பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி கல்வி கற்க முனைந்த போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பாடசாலைகளே அமைக்கப்பட்டன.  தற்போது இருவரும் இணைந்து கல்வி கற்கும் வகையில் பள்ளிக்கூடம் இருப்பினும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருவரும் பேச இயலாத நிலையே உள்ளது.

இது போன்ற பாகுபாடுகளை களைய விளையாட்டு பெரிய உந்துகோலாக அமையும்.  விளையாட்டுத்துறையில் கவனிக்கும் போது சில விளையாட்டுகளில் மட்டுமே ஆண் பெண் இணைந்து விளையாடும் விளையாட்டுகள் உள்ளன.  உதாரணமாக இறகுப்பந்து, பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் போன்ற ஒரு சில விளையாட்டுகளிலேயே கலப்பின இரட்டையர்கள் என்ற பிரிவு உள்ளது.  

இதை மாற்றி மட்டைப்பந்து(கிரிக்கெட்), கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆண்களும் பெண்களும் சரிப்பாதியாக எடுக்கப்பட்டு விளையாடும் போது பெண்களின் நிலையும் உயரும்.  பெண்களும் ஆண்களுக்கு இணையாக பார்க்கப்படுவர்.  இதற்கும் உதாரணமாக மட்டைப்பந்தை கொள்ளலாம்.  ஆண்கள் மட்டைப்பந்து விளையாடுவதைக் கவனிக்க கொண்டாட இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பெண்கள் விளையாடும் போது இருப்பதில்லை.  இருவரையும் இணைத்து விளையாட செய்யும் போது இந்நிலை நிச்சயம் மாறும்.  பெண்களின் மீதான எண்ணங்களும் மதிப்பும் படிப்படியாக மாறும்.

இந்த மாற்றத்தை விளையாட்டுத்துறை கவனத்தில் கொண்டு பள்ளிக்கல்வியிலிருந்தே மாற்றம் கொண்டு வரும் போது வெகு விரைவிலேயே மக்களிடையே பாலின வேறுபாடு களையப்பட்டு பாலின சமத்துவம் என்பது எளிதாக ஏற்படும்.  இதை விளையாட்டுத்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால் இந்த மாற்றத்தை சீக்கிரமாக கண்கூடாக காணலாம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   குறைக்கப்பட்ட தங்கத்தின் இறக்குமதி.... தங்கத்தின் விலை அதிகரிப்பு?!!