மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் வரை....முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை!!!

மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் வரை....முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை!!!

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். மல்யுத்த வீரராக இருந்த ஒருவர் அரசியல் தலைவராக மாறியது குறித்து விவரிக்கிறது இந்த  செய்தி தொகுப்பு.. 

ஆரம்பகால பணிகள்:

1939-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் எட்வா மாவட்டத்தில் பிறந்த முலாயம் சிங், அரசியல் உலகில் கால் பதிப்பதற்கு முன்பாக மல்யுத்த வீரராக இருந்தவராவார். பள்ளி ஆசிரியராக இருந்து, பின்னாளில் அரசியலுக்கு வந்தார். 

முதல் தேர்தல்:

அரசியல் பின்னணி இல்லாவிட்டாலும் தனது 28-வது வயதில் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி தலைவரினால் அடையாளம் காணப்பட்டு 1967-ம் ஆண்டு ஜஸ்வந்த் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். 

இளம் வயதிலேயே....:

இளம்வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்ற முலாயம் சிங், இதுவரை 10 முறை எம். எல்.ஏ.வாகவும், 1 முறை எம். எல்.சி.யாகவும், மூன்று முறை உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் அரசியல் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். 

சிறைவாசம்:

இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்ததன் விளைவாக 19 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 

பிரதமர் வாய்ப்பு:

இந்திய பிரதமராக இருந்த தேவகவுடா ராஜினாமா செய்ததையடுத்து முலாயம் சிங்குக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு இறுதி நேரத்தில் கைநழுவிப்போனது. 

பாபர் மசூதி ஆதரவு:

மேலும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார் முலாயம் சிங். பாபர் மசூதியின் அருகே பறவை கூட பறக்க முடியாது என கூறி இஸ்லாமிய மக்களுக்கு அரணாக விளங்கினார். 

சிகிச்சை:

82-வயதான முலாயம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக அரியானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் முலாயம் சிங் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 

இதையும் படிக்க:   எதிரிகளையும் அரவணைத்தவர் முலாயம் சிங்..!!!