ரூ.62 கோடி டெண்டரை ஆட்டையப் போட்ட மாஜி அமைச்சர் குடும்பம்!! கொந்தளிக்கும் திமுகவினர்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தோற்ற திமுக அமைச்சர்கள்!!

ரூ.62 கோடி டெண்டரை ஆட்டையப் போட்ட மாஜி அமைச்சர் குடும்பம்!! கொந்தளிக்கும் திமுகவினர்!!
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆளுமைக்கு முன்பு திமுக அமைச்சர்கள் தோற்று விட்டதாக, திமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். 
 
திருச்சி மற்றும் புதுக்கோட்டை கிராமப்புறங்களில் சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறை மூலம் 62 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள் விடப்பட்ட டெண்டரை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் குடும்பத்தினர் கைப்பற்றினர். 
 
தேர்தல் பணிகள் காரணமாக சாலை வேலைகள் முடங்கியிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் ரகுபதிக்கு இந்த டெண்டர் விவகாரம் தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும் போது அதிமுகவினர் சாலை பணிகளை செய்தால் நன்றாகவா இருக்கும் என எண்ணி, ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குநரிடம் விஜயபாஸ்கர் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினார். 
 
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 62 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டருக்கு, விஜயபாஸ்கரின் தந்தை மற்றும் உறவினர் பெயரில் பணி ஆணையும், ஒர்க் ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது. இதனை புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி தனது பணி மாறுதலுக்கு முன்பு ஒப்புதல் அளித்திருந்தார்.  
 
இதனால் அதிர்ச்சியடைந்த திமுக நிர்வாகிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். அதிமுக ஆட்சியின் போது, திமுகவினரை ஓரங்கட்டி வைத்திருந்த விஜயபாஸ்கரால், தங்களால் எந்தப் பணியும் செய்ய முடியாமல் போனதாக குற்றம்சாட்டுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளிக்க விடாமல் செய்த அவருக்கு இரு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் 62 கோடி ரூபாய்க்கான டெண்டர் திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். 
 
10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக ஆட்சிக்கு வந்தும், கட்சியை சேர்ந்தவர்களுக்கு டெண்டரை கொடுக்காமல், அதிமுக ஆட்சியில் நடந்ததே தற்போதும் தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் விஜயபாஸ்கரின் ஆளுமைக்கு முன்பு திருச்சி, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சர்கள் தோல்வியை அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.