என்னடா இது..? சென்னை, மும்பைக்கு வந்த சோதனை! நடையைக் கட்டிய சாம்பியன்கள்!

ஐ.பி.எல்லின் ஜாம்பவான் அணிகளான, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இரண்டும், நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தவற விட்டுள்ளன. 15 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில், முதல்முறையாக இவ்விரு அணிகளும் ஒருசேர பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு... 

என்னடா இது..? சென்னை, மும்பைக்கு  வந்த சோதனை!   நடையைக் கட்டிய  சாம்பியன்கள்!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எல்லை ஆட்சி செய்து வந்த, சென்னை மற்றும் மும்பை ஆகிய இரண்டு  அணிகளும் இல்லாத, முதல் பிளே ஆஃப் சுற்று இந்தாண்டு நடைபெறப் போகிறது. 2 அணிகளும் ஒருசேர பிளே ஆஃப் வாய்ப்பை இழப்பது இதுவே முதல்முறை என்பதால், ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் லீக்கான ஐ.பி.எல். தொடரில் விளையாட, அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கின்றனர். உலக கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில், ஒளிபரப்பு மூலம் மட்டும் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

இத்தகைய நம்பர் ஒன் தொடரில், இதுவரை முடிந்துள்ள 14 சீசன்களில், மும்பை மற்றும் சென்னை அணிகள் மட்டுமே 9 முறை கோப்பையை வென்றுள்ளதைப் பார்க்கும் போது, தமிழ் சினிமாவுக்கு எப்படி சூப்பர்ஸ்டார் - உலகநாயகன், தல - தளபதி என இருதுருவ ஆளுமைகள் இருக்கிறார்களோ, அதேபோல ஐ.பி.எல்லை ரூல் செய்து வரும் இரண்டு அணிகள் சென்னையும், மும்பையும் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். 

அதேபோல மற்ற அணிகளை விட அதிக ரசிகர் கூட்டத்தைப் பெற்ற அணிகளும் இவை தான். குறிப்பாக 4 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள சென்னை அணி, இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு அணியாக விளங்குகிறது. 

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு வரையில், பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப்புக்குள் நுழைந்த ஒரே அணி என்ற சாதனையை படைத்தது தோனி தலைமையிலான சென்னை அணி. ஆனால் 2020-ல் முதல் முறை பிளே ஆஃப் சுற்றை தவறவிட்ட சென்னை அணி, அடுத்த ஆண்டே கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

5 கோப்பையுடன் மும்பையும், 4 கோப்பையுடன் சென்னையும் வீருநடை போட்டு, இந்தாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் களமிறங்கிய நிலையில், முதல் 8 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்த மும்பை, முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. சென்னை அணிக்கும் இந்த சீசன் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையவில்லை.

இந்த நிலையில், சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி, சென்னை அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாக அமைந்தது. இதில், ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை அணி, நான் வெளியே போனால் உன்னையும் கூட்டிக்கொண்டு தான் போவேன் என்ற பாணியில், சென்னை அணியின் பிளே ஆஃப் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன்மூலம் நடப்பு சீசனில் இரண்டு அணிகளுமே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.

முதல்முறையாக 2 அணிகளும் பிளே ஆஃப்புக்கு தகுதி பெறாததால், கவலை அடைந்துள்ள ரசிகர்கள், இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் வெற்றி பெறட்டும் என ஆறுதல் அடைந்துள்ளனர்.