வாலு போய் கத்தி வந்தது...கொரோனா போய் குரங்கம்மை வந்துட்டா...!

கொரோனாவைத் தொடர்ந்து குரங்கம்மை என்ற புதிய வகை நோய் பரவி உலகை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...

வாலு போய் கத்தி வந்தது...கொரோனா போய் குரங்கம்மை வந்துட்டா...!

குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் குரங்கம்மை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தொற்றால் காய்ச்சல் தலைவலியுடன் உடலில் சிறு சிறு கொப்பளங்கள் உருவாகும். கடந்த 1996 மற்றும் 97-ம் ஆண்டுகளில்  காங்கோ நாட்டில் இந்த அம்மை பரவியது. பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் மட்டுமே அறியப்பட்டு வந்த குரங்கம்மை என்ற இந்த நோய்,  இன்று கண்டம் தாண்டியதால், உலகம் உச்சரிக்கும் பெயராக மாறியுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் என பல்வேறு நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகி வருவது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட தொற்று பாதிப்பாளர்களை கணக்கில் வைத்துப் பார்த்தால் ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ள ஆண்களால் பரவுவதாக தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று என்று இதற்கு முன் கூறப்படாத நிலையில் அது உண்மையா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் சர்வதேச மைய பொது சுகாதார பேராசிரியர் ஜிம்மி விட்வொர்த். பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் குரங்கம்மை என்பது மிகவும் ஆபத்தானது என்பதால் முடிந்தவரை விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய தொற்று என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சார்ஸ் மற்றும் கொரோனா தொற்றுக்கும் குரங்கம்மைக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் கண்டறிய வேண்டும் என்கிறார் கனடா தலைமை பொது சுகாதாரத் தலைவர் டாக்டர் தெரசா டாம். ஓரினச் சேர்க்கையாளர்களால் என்று சுருக்கி விடாமல் நெருங்கிய தொடர்பு என்பதையும் வெவ்வேறு வழிகளிலும் பரவும் என்பதையும் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கொரோனாவுக்கு பின் சர்வதேச பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் தொற்று பரவலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இதுவரை 100 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், குரங்கம்மை குறித்து ஆலோசனை நடத்த அவசர கூட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குரங்கம்மைக்கு என்று தடுப்பூசி இல்லையென்றாலும் பெரியம்மை நோய் தடுப்பூசியே 85 சதவீத பலனளிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அபாயகரமான தொற்று என்றாலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவையும் முதலில் இப்படித்தான் சொன்னார்கள். அது கோர தாண்டவம் ஆடி உலகையே ஆட்டியது. இனி குரங்கம்மை ஆட்டத்தை காண உலகம் தயாராகலாம்...