ஒலிம்பிக் வாள்வீச்சில் பங்கேற்கும் முதல் இந்தியர்: பவானியின் வாள் ஒளிவீசுமா..?

தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள பவானியின் வாள், ஒலிம்பிக்கிலும் ஒளி வீசி இந்தியாவுக்கு பெருமை தேடி தருமா..? 

ஒலிம்பிக் வாள்வீச்சில் பங்கேற்கும் முதல் இந்தியர்: பவானியின் வாள் ஒளிவீசுமா..?

இந்தியா நூறாண்டு காலத்திற்கும் மேலாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்குபெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார், தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள பவானியின் வாள், ஒலிம்பிக்கிலும் ஒளி வீசி இந்தியாவுக்கு பெருமை தேடி தருமா..? 

உலகின் முதன்மையான மாபெரும் விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கில் இந்தியா நூறாண்டுகளுக்கும் மேலாக பங்கெடுத்து வருகிறது. ஆனால், முதல் நவீன ஒலிம்பிக் போட்டியான 1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலேயே வாள்வீச்சு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 125 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து ஒருவர், ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தான், இந்த அரும்பெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். 

வடசென்னை - பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த நடுத்தர குடும்பப் பெண்ணான பவானி தேவிக்கு, அவருடைய 10 வயதில் அதாவது 6ஆவது படிக்கும் போது வாள்வீச்சு அறிமுகமானது. ஃபாயில், எப்பி மற்றும் சாப்ரே என 3 வித வாள்சண்டையில், வேகமாக வாள்களை இயக்கும் சாப்ரே பிரிவே பவானியின் தேர்வு. ஆனால், இதில் பயன்படுத்தும் உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், தொடக்க காலங்களில் மூங்கில் கம்புகளைக் கொண்டே பயிற்சி மேற்கொண்ட பவானி, போட்டிகளின் போது மட்டுமே சாப்ரே ப்ளேடை பயன்படுத்தினார்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கத்தை வென்ற பவானி தேவிக்கு, முதல் சர்வதேச தொடர் மறக்க முடியாததாக அமைந்தது. துருக்கியில் நடைபெற்ற தொடரில் மூன்று நிமிடம் தாமதமாக வந்ததற்காக, தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல இடர்களை கண்ட பவானி தேவி, அவற்றால் துவண்டு போகாமல், விடாமுயற்சியோடு பயிற்சி மேற்கொண்டு, 9 முறை தேசிய சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார். 

முதன்முறையாக 2009 காமன்வெல்த் போட்டிகளில், சாப்ரே குழு போட்டியில் வெண்கலம் வென்று சர்வதேச அரங்கில் தனது கணக்கை தொடங்கிய பவானி தேவி, 2010 ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பிலும் சாப்ரே குழு போட்டியில் வெண்கலம் வென்றார். அடுத்து 2012 காமன்வெல்த் போட்டிகளில் சாப்ரே குழுப் போட்டியில் வெள்ளியும், தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். பின்னர் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2014 ஆசிய சாம்பியன்ஷிப்பில், வெள்ளிப்பதக்கம் வென்று வாள்வீச்சு அரங்கில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக வலம் வந்தார். 

எனினும், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பவானி தேவியால் தகுதி பெற முடியாமல் போனது. இந்திய கிரிக்கெட் லெஜண்ட் ராகுல் டிராவிட்டின் தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் தேர்வான பவானி, இத்தாலியில் தங்கி பயிற்சியை மேற்கொள்ள தொடங்கினார். இத்தாலி பயிற்சியாளர் நிக்கோலா ஜெனாட்டியிடம் தனது ஆட்ட நுணுக்கங்களையும், மனோதிடத்தையும் பெருக்கிய பவானி 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை ஏந்தி, ஒலிம்பிக்கில் தனது வாளை சுழற்ற உள்ளார். பவானியின் வாள், ஒலிம்பிக் வாள்வீச்சில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்...