ஓடிடி படங்களுக்கு தியேட்டரில் அனுமதி இல்லை..! தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அறிவிப்பு...!

பிரிவியூ காட்சிகளுக்கும் தியேட்டரை தர தயாராக இல்லை..!

ஓடிடி படங்களுக்கு தியேட்டரில் அனுமதி இல்லை..! தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அறிவிப்பு...!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாதங்கள் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சூழலும் இருந்தது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதில் முக்கிய இடம் என்றால் அது தியேட்டர்கள் தான். 

இந்த ஒன்றரை வருடங்களில் தொற்று குறையும் போதெல்லாம் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டாலும் கூட போதிய வருமானத்தை தியேட்டர் உரிமையாளர்களால் பெற முடியவில்லை. அதேபோல எடுக்கப்பட்ட பல படங்களும் வெளியிட முடியாமல் தேக்கமடைந்தன. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற படத் தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது ஓடிடி தளங்கள் தான். over the top எனப்படும் இந்த சமூகவலைதளங்கள் மூலம் பல முன்னணி நடிகர்கள், நடிகைகளின் படங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவது தவிர்க்கப்பட்டது. 

2016-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் பல வெளியிடப்பட்டு வந்தாலும் கூட, இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இந்த ஓடிடி தளங்கள் தான் இருந்தன. இதனால், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து, கா.பெ.ரணசிங்கம், பென்குயின், மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று போன்ற முன்னணி ஹீரோ, ஹீரோயின்ஸ் படங்கள் அடுத்ததடுத்து ஓடிடி பிளாட்ஃபார்ம்-களில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் ஓடிடி பிளாட்ஃபார்மை கடுமையாக எதிர்க்கத் துவங்கினர். ஓடிடி தளங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குமுறினர். ஜோதிகா, சூர்யாவின் படங்களை இனி தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என அப்பட்டமாகவே கூறி வந்தனர். 

இந்த நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை சற்று குறைந்திருப்பதால், மீண்டும் தியேட்டர்களை 50% இருக்கைகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. என்னத்தான் உள்ளங்கைக்குள் இருக்கும் செல்போனிலோ அல்லது 4 சுவருக்குள் இருக்கும் டிவியிலோ புது புது படங்களை உடனுக்குடனே பார்க்க நேர்ந்தாலும், தியேட்டரில் ரசிகர்களுடன், ரசிகராக விசில் அடித்து, கைத்தட்டி, ஆராவாரத்துடன், இடைவெளையில் பாப்கார்ன், ஐஸ்கிரீமுடன் படத்தை ரசித்து தியேட்டரை விட்டு வெளியே வரும் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம். அப்படியிருக்க ஓடிடி தளங்களில் வெளியான பல படங்களை மீண்டும் தியேட்டர்களில் காணலாம் என ரசிகர்கள் கணக்கு போட்டு வைத்திருந்தனர். 

ஏனென்றால் திடீரென தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், யார் படங்களை வெளியிடுவது என்பதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும். அப்படியிருக்க, ஓடிடியில் வெளியான ஹிட் படங்களை நிச்சயம் தியேட்டர்களில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடி தளங்களில் வெளியான அல்லது விற்பனை செய்யப்பட்ட படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓடிடியில் விற்கப்படும் படங்களுக்கான பிரிவியூ காட்சிகளுக்கும் தியேட்டர்களை கொடுக்க மாட்டோம், தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிடுவோம் என கூறியிருக்கின்றனர். மேலும் ஓடிடிக்கென தனியாக படங்களை தயாரித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறியிருக்கின்றனர். இதனால், இனி புதுப் படங்கள் வரும் வரை ரசிகர்களும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.