சசிகலா பேரை கேட்டாலே அலறும் எடப்பாடி...! இந்தளவுக்கு வெறுக்க என்ன காரணம்?

அதிமுக-திமுக-பாஜக என முக்கோண அரசியல் தலைவர்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது தமிழகம். இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் அதிகரித்து வரும் உட்கட்சி பூசலால் என்ன செய்வது என்று தெரியாது விழி பிதுங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

சசிகலா பேரை கேட்டாலே அலறும் எடப்பாடி...! இந்தளவுக்கு வெறுக்க என்ன காரணம்?
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகள், கொடநாடு எஸ்டேட் விவகாரம், ஓ.பன்னீர் செல்வத்திடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, சசிகலா அதிமுக தொண்டர்களிடம் போனில் பேசி வருவது, எப்போது வேண்டுமானாலும் திமுக பக்கம் சாயவிருக்கும் நிர்வாகிகள் என பல பிரச்னைகளில் சிக்கி சின்னாப் பின்னாமாகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்படைத்தது சசிகலா தான். 
 
எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார் என்பதை நம்மால் மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்த மக்கள் மட்டுமின்றி மூத்த அதிமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருந்த நேரத்தில் அவரை நெருக்கி பதவியை பிடுங்கி எடப்பாடி வசம் ஒப்படைத்த சசிகலாவை, பின்னாளில் ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து கொண்டு ஒதுக்குவது ஏன்? லாஸ்ட் பெஞ்சில் இருந்தவரை முதல்வராகி அழகுபார்த்த சசிகலா திரும்பி வந்ததும், அவரை கண்டுகொள்ளவேயில்லை.
 
மாறாக சசிகலா சிறை சென்றதும், அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பியதே உன் குடும்பம் தான் என ஒருமையில் பேசி விமர்சிக்கவும் ஆரம்பித்தார் எடப்பாடி. அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சர்யம், வியப்பு, அதிர்ச்சி என அனைத்து வகையான உணர்வுகளும் ஏற்பட்டிருக்கக் கூடும் அல்லவா?

 
ஏன் அவர் இப்படி செய்கிறார் என மக்களும், அதிமுக நிர்வாகிகளும் குழம்பிய நிலையில், செய்வதறியாது பல நிர்வாகிகளும் எடப்பாடிக்கு தலையை அசைக்க முடியாத நிலை ஏற்பாட்டாலும் கூட வெளி உலகத்தில் ஆமாம் ஆமாம் என கூறி, சசிகலாவை தங்களால் முடிந்த வரை விமர்சிக்கவும் துவங்கினர். சரி சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு மீண்டும் இணைந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதும் அவருடன் விரோதப் போக்கையே கடைபிடித்தார் எடப்பாடி பழனிசாமி. 
 
சரி எப்படியும் தேர்தல் நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து விடுவர் என யோசித்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டு அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். விளைவு அதிமுக தேர்தலில் படுதோல்வி. 75 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த சசிகலா இனியும் என்னால் கட்சியை விட முடியாது என அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் நாள்தோறும் உரையாடி வருகிறார். இதனால் அதிர்ந்து போன எடப்பாடி சசிகலாவுடன் செல்போனில் பேசியவர்களை எல்லாம் கட்சியிலிருந்து விலக்கி வருகிறார். 
 
இப்படியாக சென்றுக் கொண்டிருக்க ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன. இரண்டும் சந்தித்த போது? என்ற சூழ்நிலையும் உருவானது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காண எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை சென்றிருந்த அதே நேரம், அதிமுக கொடி பறந்த காரில் மருத்துவமனைக்கு வந்தார் சசிகலா. இருவரும் நேருக்கு நேர் சந்திப்பார்கள்.. ஏதேனும் விஷயம் நடக்கும் என ஒட்டு மொத்த தமிழ்நாடும் வச்சக் கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கும் போது, பெரும் ட்விஸ்டாக எடப்பாடி மருத்துவமனையில் இருந்து கிளம்பி சென்ற பிறகே மருத்துவமனைக்குள் சென்றார் சசிகலா. 
 
சசிகலாவால் முதலமைச்சர் ஆனவர், தற்போது ஏன் அவரை வெறுத்து ஒதுக்குகிறார் எனக் கேட்டால், ஜெயலலிதா இருந்த போது, அவரது ஒற்றை தலை மட்டுமே மேலோங்கி இருந்தது. எந்த ஒரு அமைச்சர்களும் பொதுவெளியில் தங்களது கருத்துகளை கூறி விட முடியாது. ஓ.பன்னீர் செல்வத்தை தவிர பிற அமைச்சர்கள் குறித்து பொதுவாக மக்கள் அறிந்திருப்பது ஆச்சர்யம் தான். அப்படியிருக்க சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றி விட்டால், மீண்டும் எடப்பாடி பழனிசாமி லாஸ்ட் பெஞ்ச்க்கு சென்று விடுவார் என அஞ்சுவதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் கிசு கிசுக்குகின்றனர். 
 
ஆனால் ஒருவேளை சசிகலா அதிமுகவை கைப்பற்றி விட்டால், எடப்பாடி நிலைமை ஏன்னவாகும் என சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. சசிகலா வந்த உடனேயே சரண்டர் அடைந்திருந்தால், ஒருவேளை கட்சியில் உயர் பதவியில் அதிகாரத்தில் இருந்திருப்பார். சசிகலாவை மேடைக்கு மேடை, செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து கட்சியை விட்டு விரட்டும் எடப்பாடி பழனிசாமியை, சசிகலா அதிமுகவை ஒருவேளை கைப்பற்றினால் என்ன செய்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்...