ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கும் இபிஎஸ்..! பரபரக்கும் அரசியல் களம்..!

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருப்பது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
தேர்தல் கூட்டணி:
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பேன் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பாமக தலைமையில்தான் கூட்டணி, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். பாஜக - காங்கிரஸ் உடன் தான் கூட்டணி, அதிமுக உடன் கூட்டணி இல்லை என்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இவ்வாறு தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான விவாதங்கள் எழ தொடங்கி உள்ளன.
மோடி vs இபிஎஸ்:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பற்றி எரிந்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் கட்சி தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ். கட்சி விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ் பல முறை முயன்றும் முடியாமல் போனது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஓபிஎஸ், இபிஎஸ்:
கடந்த வாரம் திண்டுக்கலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்த மோடியை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க மட்டும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பித்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அருகருகே இருக்கவில்லை. சட்டமன்றத்தில் கூட ஓபிஎஸ் இன் இருக்ககை மாற்றக் கோரி இருந்தா இபிஎஸ். அவ்வாறு இருக்க, மோடியை வரவேற்ற இருவரும் அருகருகில் நின்றிருந்த புகைப்படங்கள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அமித் ஷா vs இபிஎஸ்:
மோடி திண்டுக்கல் வந்து சென்ற மறு நாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தார். அந்த நிழ்ச்சியில் கலந்து கொள்ள இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஓபிஎஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஆனால் இபிஎஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
முதல் நாள் ஓபிஎஸ் உடன் அருகருகில் நிற்க வைத்து தான் இபிஎஸ் இன் கோபத்திற்கு காரணம், அதனால் தான் அமித் ஷாவை அவர் சந்திக்க வில்லை என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
அதிமுக வேறு; பாஜக வேறு:
அமித் ஷாவை சந்திக்க ஏன் செல்லவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ்ஸிடம் கேட்கப்பட்ட போது, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பின் பல்வேறு காரணங்கள், அரசியல்கள் இருப்பதாக கூறப்பட்டது.
ஆளுநர் சந்திப்பு:
இபிஎஸின் இந்த பேச்சால் பாஜக தலைவர்கள் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்திக்க இருக்கிறார் இபிஎஸ்.
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்தும், மழை வெள்ள பாதிப்புகள மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.