திராவிடத் தலைமகன் அண்ணா!

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட அரசியலின் தலைமகன் அனைத்து கட்சியினராலும் கொண்டாடப்படுகிறார் பேரறிஞர் அண்ணா.

1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றார். பகுத்தறிவு பகலவன், சீர்த்திருத்தவாதி தந்தை பெரியாரின் சீடராக திகழ்ந்த அண்ணா, 1938-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். 

1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தை நிறுவினார். கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. ஆனால் பெரியாரின் கரம் பிடித்து வளர்ந்த அண்ணாதுரையோ, பிள்ளையாருக்கு தேங்காயும் உடைப்பதில்லை, பிள்ளையார் சிலையையும் உடைப்பதில்லை என்ற கருத்தை கடைசி வரையிலும் கொண்டிருந்தார். 

இன்றைக்கு திராவிட மாடல் என்ற வார்த்தை மிகப்பெரிய சக்தியாக மாறி தமிழ்நாட்டின் இந்தியாவின் அரசில் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஆணி வேராய், திராவிட சித்தாந்தங்களின் தலைவனாய், திராவிட இயக்க அரசியலின் பிதாமகனாய் போற்றப்படுபவர் பேரறிஞர் அண்ணா. 

1967-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, மெட்ராஸ் என்றே அழைத்து வரப்பட்ட நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பெருந்தகையானார். 

சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தோடு, இந்தியை எதிர்த்து இருமொழிக் கொள்கையை ஆதரித்தார் பேரறிஞர் அண்ணா. டெல்லியில் இருந்து தென்தமிழகம் நோக்கி விரைந்த அரசியல் ஆக்கிரமிப்பினை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய பெருமையும் பேரறிஞர் அண்ணாவையேச் சேரும்.

அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் மட்டுமல்லாது, அ.தி. மு.க. ம.தி. மு.க. பா.ம.க. என அனைத்து கட்சியினராலும் பேதமின்றி கொண்டாடப்படும் அரசியல் ஆசானாகவே திகழ்கிறார் பேரறிஞர் அண்ணா. 

இதையும் படிக்க: குல தொழிலை எப்படி தொடர்ந்து பின்பற்ற முடியும்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி!