" பொன்னாடை வேண்டாம்; புத்தகமே போதும் " கர்நாடகாவிலும் திராவிட மாடலா ..?

" பொன்னாடை வேண்டாம்; புத்தகமே போதும் "   கர்நாடகாவிலும் திராவிட மாடலா ..?

தன்னை சந்திக்க வருவோர் பொன்னாடைகளுக்கு பதிலாக புத்தகங்களை அளிக்கலாம் என காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கூறியிருப்பது, 
கர்நாடகாவிலும் திராவிட மாடல் துளிர்விட தொடங்கிவிட்டதோ என நினைக்கவைக்கிறது. 

கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான  பிரச்சாரங்களின் போது,  காங்கிரஸும் பாஜகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தனித்தனியே பல்வேறு பரப்புரைகளை அள்ளி வீசினர்.  பாஜக சார்பில் பிரதமர் மோடி,  அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து தங்களின் கட்சி சார்பாக  மக்களைக் கவரும் வகையில் முக்கிய வாக்குறுதிகளை கொடுத்திருந்தனர். 

Mangalore Today

அந்தவைகையில், காங்கிரஸ் சார்பில் மங்களூருவில்  ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டபோது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற சலுகையை அறிவித்திருந்தார். 

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம்,  உள்ளிட்ட  பல்வேறு வாக்குறுதிகள் அறிவித்திருந்த நிலையில்,  மங்களூருவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸின் 5வது வாக்குறுதியாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று ராகுல் காந்தி அறிவித்தார்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் மிக முக்கியமான திட்டமாக கருதப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தினை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்போதே கர்நாடகாவில் காங்கிரஸ் திராவிட மாடலை பின்பற்றியதோ என பல கருத்துகள் எழுந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவில் திராவிட மாடல் ஆட்சியே வெற்றி பெற்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.   

இவ்வாறிருக்க, தற்போது, கர்நாடகாவின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையா  தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகள், பூங்கொத்துகளுக்கு பதிலாக  புத்தகங்களைக் கொடுத்து அன்பைப் பறிமாறிக்கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார். 

இதையும் படிக்க   } பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்...தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தன்னைச் சந்திக்க வரும் தலைவர்களுக்கு  பொன்னாடைபோர்த்தி வரவேற்பதை விட பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து கூறுவதை விட, புத்தகங்களைக்  கொடுத்தால் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் பெருமையையும், கலாச்சார அடையாளங்களையும் எடுத்துக்கூறும் விதமாக இருக்கும் என அறிவுறுத்தி அதையே செயல்படுத்தியும் பிற அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் இந்த நடைமுறையை பின்பற்றும் படியும் அறிவுறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, திராவிட மாடல் என தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின்  செயல்படுத்திவரும் முக்கியமான சாராம்சங்களை காங்கிரஸ் தற்போது கர்நாடகாவில் முன்மொழிந்து வருவது, கர்நாடகாவிலும் திராவிட மாடலை காங்கிரஸ் பின்பற்றி அதனை ஆட்சிக்குள், செயல்படுத்த நினைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. 

இதையும் படிக்க    } திமுகவில் துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து ஆலோசனை?