டெண்ட் தியேட்டரில் படம் பார்த்திருக்கிங்களா..? டெண்ட் தியேட்டர்னா என்னனு தெரியுமா.? 

டெண்ட் தியேட்டரில் படம் பார்த்திருக்கிங்களா..? டெண்ட் தியேட்டர்னா என்னனு தெரியுமா.? 

அந்த காலம் அது, அது வசந்த காலம், இன்றிலிருந்து 60 வருடங்களுக்கு முன்பு திரும்பி பார்த்தால், டூரிங் டாக்கீஸ் என்றொரு இடமுண்டு. 

ஒரு பெரிய மணல் பரப்பில் மக்கள் அமர்ந்து அல்லது படுத்துக்கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு படம் பார்க்கும் இடமே டூரிங் டாக்கீஸ் என்று அழைக்கப்பர். இயற்கையான காற்றோட்டமும், குளுகுளு மணலும் பல நூறு குளிர் சாதனப்பெட்டிகளில் கிடைக்காத குளிர்ச்சியை மக்கள் அன்று அனுபவித்தனர்.

ஊருக்கு வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த கொட்டாய். விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் ரூம் மாதிரி ஒரு தகர ஷெட். மூனாங் க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர். காலையில் தெருவில் டம் டம் என்று அடித்துக் கொண்டு ஒரு மாட்டு வண்டியில் இரண்டு பக்கமும் படத்தின் பெயர் போட்டு தட்டி கட்டியிருக்கும்.

பஞ்சு மிட்டாய் கலரில் படத்தின் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே போவார்கள். நோட்டீஸ் வாங்க பிஞ்சுகள் பின்னாலேயே ஓடுவார்கள். மாலை 6 மணிக்கு தியேட்டரில் கூம்பு ஒலி பெருக்கியில் பாட்டு போடுவார்கள். அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் போடப் போகின்றார்கள் என்பதற்கான சிக்னல் அது.

 ஊர் முழுக்க கேட்கும் இந்த ஒலியை வைத்து சினிமா போக வேண்டியவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். பெண்கள் ரெமி பவுடர் எடுத்து அப்பிக் கொள்வார்கள். வீபூதிக் காப்பு செய்த முருகர் மாதிரி முகம் மாறிப் போயிருந்திருக்கும்.

"பாட்டு உள்ளே போடறாங்க..." என்று தியேட்டருக்கு ஓடுவார்கள். குழந்தையை தர தரவென இழுத்துக் கொண்டு ஓடுவார்கள்.
தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் கொண்டே வரும்

தியேட்டர் வரைக்கும் தான் கணவன் மனைவி ஜோடி செல்ல முடியும், தியேட்டருக்குள் ஆண் - பெண் என்று redefine செய்யப் படுவார்கள். ஆண்களுக்கு தனி இடம். பெண்களுக்கு தனி இடம். மூன்று மணி நேர legal separation.

தரை டிக்கெட் நாலணா. கீழே மணல் பரப்பியிருக்கும். அந்த மணலைக் குவித்து அதை  high chair ஆக்குவார்கள்.
ஸ்க்ரீன் என்பது ஒரு பெரிய வெள்ளைத் துணி. அதற்கு திரை எல்லாம் கிடையாது.கவர் போடாத செல்போன் மாதிரி. நிறைய அடி வாங்கியிருக்கும்.

ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் ஸ்க்ரீனுக்கே போய் விட்டதால் ஆடியன்ஸில் நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள்.
'ட்ட்ட்ட்ட்ரிங்' என்று மணி அடிக்கும். நல்வரவு என்று ஸ்லைட் போடுவார்கள். 

முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று போட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம். கொடுத்த நாலணாவுக்கு நான்கு மணி நேரம் படம் பார்க்கலாம். முதல் சீனிலேயே மகாராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் போதே பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டு பிறக்கும்.

டெலிவரிக்காக எம்.என்.நம்பியார் தயாராகக் காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் மாறி மாறி வில்லன்களாக வருவார்கள். நம்பியார் ஒரு படத்தில் நாகேந்திரனாக வந்தால் அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வருவார்.இப்படியாக இருவரும் பிற்போக்கு கூட்டணி அமைத்து கெட்ட செயல்கள் செய்து வருவார்கள். 

அன்றைய கால  கட்டத்தில் வள்ளி திருமணம், ஹரிதாஸ், சத்தியவான் சாவித்திரி, சம்பூர்ண ராமாயணம் ராமாயணம், லவகுசா போன்ற நீளமான 4  மணி நேரத்திற்கு மேல் ஓடும் படங்களை சாப்பாடு கட்டிக் கொண்டு பார்த்தவர்கள் அதிகம். பத்து நிமிடத்திற்கு ஒரு பாடலும், ஆடலும் கொண்ட அன்றைய டூரிங் டாக்கீஸ் படங்களை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது.

படத்தில் மொத்தம் நான்கு  இண்டர்வெல். டைரக்டர் தயவில் இரண்டும் ரீல் மாற்றுவதற்காக 
இரண்டு இண்டர்வெல். இண்டர்வெல் விட்டதும் " சோடாலேர்...வேகலே..." என்று பையன்கள் கத்திக் கொண்டு போவார்கள்.
சோடா கலர், வேர்க்கடலை என்பதின் திரிபுகள் அவை. இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட் போடுவார்கள்.

படம் முடியும் போது பதினோரு மணி ஆகியிருக்கும் கும்பலாக போகும் போது, சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.
இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில் பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம். கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.

இன்றைக்கு திரை அரங்கம் நவீனமயமாகி விட்டாலும் அன்றைய 'டூரிங் டாக்கீஸ்' என்றழைக்கப்பட்ட திரை அரங்கில் சினிமா பார்த்தவர்கள்  அடைந்த  மகிழ்ச்சி, இன்றைக்கு நவீன மால்களில், அதி நவீன தொழில் நுட்ப திரை அரங்குகளில் சினிமா பார்த்தாலும் அது போன்ற இனிமையான காலம் வருமா? என கேட்காமல் இருப்பதில்லை.


ஜாதி, மத இன வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைத்ததில் டூரிங் டாக்கீஸ்களின் பங்கு மிக அதிகம் என்றே கூறலாம்.  சினிமா காலம் கடந்தாலும் நம்மோடு தொடர்ந்து வரும்  கலையாத கனவுலகம். தமிழ் சினிமாவிற்கு இந்திய அளவில்  தனி மரியாதையை கொடுத்தவர்கள் தமிழர்கள். 

சினிமாவில் மன்னாதி மன்னனாக வாழ்ந்த எம்.ஜி.யாரை நாட்டை ஆளும் முதல்வராக முடி சூட்டி அழகு பார்த்தது, மக்கள் திரைப்பட நடிகர்கள் மேல் வைத்த அன்பை  காட்டுகிறது இந்த கால சினிமா.