"அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்று உண்மைகளை திரித்து பேசுவதா?"

"அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்று உண்மைகளை திரித்து பேசுவதா?"

அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்று உண்மைகளை பிரதமர் மோடி திரித்து பேசுவதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தனிமை:

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, சமீப காலமாகவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்காக ஆஜராகி வந்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து, சோனியா காந்தி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த 3 மாதங்களில் இவருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின வாழ்த்து:

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை  இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வரும் வேளையில்,  நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி "இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து" தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் முத்திரை:

சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 75 ஆண்டுகளில், நாம் நிறைய சாதித்துள்ளோம். இந்தியர்களின் கடின உழைப்பால் அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், இந்தியா சர்வதேச அரங்கில் அழிக்க முடியாத முத்திரையை பதித்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களின் தலைமையில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் முறையை இந்தியா நிறுவியுள்ளது. அதே நேரத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புகளையும் வலுப்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு ஒரு முன்னணி நாடாக  இந்தியா தனது பெருமையை எப்பொழுதும் அடையாளப்படுத்தி கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளை திரித்து பேசுவதா:

சுதந்திர தின வாழ்த்து மட்டுமின்றி சோனியா காந்தி, மத்திய அரசை சாடியும் உள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளதாக கூறிய அவர், தற்போதைய மத்திய அரசாங்கம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் புறக்கணிப்பதில் பிடிவாதமாக உள்ளது, இது ஏற்க கூடியது அல்ல எனவும் அவர் சாடியுள்ளார்.  அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளை தவறாக சித்தரிப்பதையும், காந்தி-நேரு-படேல்-ஆசாத் ஜி போன்ற தேசிய தலைவர்களின் தியாகங்களை பொய்யாக்கும் அடிப்படையில் கேள்வி கணைகள் தொடுக்கப்படுவதாகவும் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். இதையெல்லாம் இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார் இவ்வாறு அந்த அறிக்கையில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.