ஓபிஎஸ்க்கு கை கொடுக்கும் டெல்லி அதிகார மட்டம்… எஸ்.பி.வேலுமணி ரெய்டு ரகசியம்… ஓபிஎஸ்க்கு உதவுகிறாரா மு.க.ஸ்டாலின்?

ஓபிஎஸ்க்கு கை கொடுக்கும் டெல்லி அதிகார மட்டம்… எஸ்.பி.வேலுமணி ரெய்டு ரகசியம்… ஓபிஎஸ்க்கு உதவுகிறாரா மு.க.ஸ்டாலின்?

அதிமுகவில் தற்போது நடக்கும் அரசியல் சதுரங்கத்தை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தனி நீதிபதி அமர்வு தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று ஈபிஎஸ் பெற்ற வெற்றி, அதிமுகவின் பொதுக்குழுவை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்ற ஈபிஎஸ் முனைப்பு, பொதுக்குழுவிற்கு தடை வாங்கி விட வேண்டும் என்ற ஓபிஎஸ் முனைப்பு என அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதில், இறுதியில் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எழுதப்போகும் தீர்ப்பு என்னவாக இருக்கப் போகிறது என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி, ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் நடைபெறுமா? கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடக்கும் ரெய்டு ஏன்? அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தற்போது குறிவைக்கப்பட்டது எதற்கு? ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரில் யாரை டெல்லி பாஜக தலைமை ஏற்க போகிறது என்று பல சந்தேகங்களும், அரசியல் நகர்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் தான் இன்றைய லென்ஸ் பகுதியில் விரிவாக பார்க்க இருக்கிறோம்…

இது மாலை முரசின் லென்ஸ்… அரசியலின் ஆழம் காணும் மந்திரக்கோல்…

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்றால், பெரும்பாலானவர்கள் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று தான் கூறுகிறார்கள். வரும் திங்கள் கிழமை காலை 9 மணிக்கு, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு, அதே நாள் காலை 9.15 மணிக்கு கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் தீர்ப்பும் வர இருப்பதை கவனித்தே, அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கு இரண்டு காரணங்களை அரசியல் விமர்சகர்களும் நமது லென்ஸ் சோர்சும் சொல்கிறது. 9.15 மணிக்கு நடக்கும் பொதுக்குழுவிற்கு 9 மணிக்கு தீர்ப்பு வழங்கினால், அடுத்து என்ன செய்வது? ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடுவதற்கான அவகாசத்தைக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்ற நிலை உருவாகும். 9 மணிக்கு வரும் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி என நீதிமன்ற கூறிவிட்டால், 9. 15 மணிக்கு பொதுக்குழுவைக் கூட்டி, அதற்குள் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். சர்வ  வல்லமை பொருந்திய நபராக ஈபிஎஸ் மாறிவிட்டால், அதற்குள் அடுத்தக்கட்ட நகர்வைப் பற்றி ஓபிஎஸ் சிந்திக்க முடியாத சூழல் ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

ஈபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதில் நியாயமும் உள்ளது:

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்றும் இதே தனிநீதிபதி தான் தீர்ப்பு வழங்கினார்.  அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என தனி நீதிபதி கூறிய கருத்தை தான் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி, தனி நீதிபதியும் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது அதிமுக உட்கட்சி விவகாரம் என நீதிமன்றம் கூற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  இருப்பினும், அதிமுகவின் அதிகாரப் போட்டியில் இருந்து, ஓபிஎஸ் அவ்வளவு எளிதில் விலகிவிட மாட்டார் என்றும் கூறுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எப்படி வேண்டுமென்றாலும் அமையலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து அதிமுகவின் எதிர்கால அரசியல் குறித்து சதி திட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்றம், டெல்லி அதிகார மையம், ஓபிஎஸ் தரப்பு என்னென்ன பிளான் பன்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் கவனிக்க வேண்டும். அதே சமயத்தில், டெல்லி அதிகார மையமும், தமிழ்நாடு அரசியலில், குறிப்பாக, அதிமுக அரசியலில் தடம் பதித்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளதா என்பதை கவனிக்க வேண்டி இருக்கிறது. 

ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கிறதா டெல்லி தலைமை:

கடந்த 3- நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டில், தற்போது, வருமான வரித்துறையும் சோதனை நடத்தத் தொடங்கியுள்ளது. இது தான் இந்த விவகாரத்தில், டெல்லி தலைமை நேரடியாக களமிறங்கியுள்ளதா என்ற வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் தொடர்ந்த வழக்கில், ஈபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தது. இதனைக் கொண்டாடக் கூட முடியாத நிலைக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வந்துள்ளன. அதற்கு காரணம், ஈபிஎஸ் வழக்கு வந்த அடுத்த நாளே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடக்கிறது. இதனை கவனிக்கும் போது, டெல்லி தலைமை ஓபிஎஸ்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் 17 பேர் மீது ஊழல் பட்டியலை வெளியிட தயார் என்று செய்தியாளர்களை சந்தித்து கூறுகிறார். யார் யார் பினாமியாக உள்ளார்கள். எங்கெங்கெல்லாம் பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எங்கிருந்து பணம் விநியோகிக்கப்படுகிறது என்றெல்லாம் அவர் விரிவான குற்றச்சாட்டுகளை முதல் நாள் முன்வைக்கிறார், அடுத்த நாளே அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி. வேலுமணி காமராஜ் வீடுகளில் அதிரடியாக ரெய்டு நடக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, அடுத்த நாள் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் புகார், தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து பார்க்கும் போது, டெல்லி அதிகார மட்டம் ஓபிஎஸ் பக்கம் நிற்பது தெளிவாகவே தெரிகிறது.

ராகுலோடு பேசினாரா ஈபிஎஸ்:

ஈபிஎஸ் கூட்டணியில் இருக்கும் டெல்லி பாஜகவுக்கும் விசுவாசமாக இல்லை. முதலமைச்சராக ஈபிஎஸ்-ஐ அறிவித்த சசிகலாவிற்கும் விசுவாசமாக இல்லை. தோளுக்கு தோளாக நின்ற ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ் விசுவாசமாக இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் கோவை செல்வராஜ் கூறியிருக்கிறார். இங்கு தான் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுகின்றன. கூவத்தூர் ரெசாட்டில் நடந்த சம்பவங்களை நாம் மறந்திருக்க மாட்டோம். கூவத்தூரில் தான் முதலமைச்சராக ஈபிஎஸ் செயல்படுவார். அதிமுக தலைமையை யாராலும் அழிக்க முடியாது என சசிகலா சவால் விட்டார். ஆனால், அதே சசிகலாவை தான் 2017 ஆம் ஆண்டு ஈபிஎஸ் கட்சியை விட்டே விலக்கினார். இந்த சம்பவத்தை நாம் அறிந்தது தான். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோடு ஈபிஎஸ் பேசியதாக சொல்லப்படுவது தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்.பி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலமாக ராகுல் காந்தியை ஈபிஎஸ் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, திமுக பாஜக பக்கம் நெருங்கு செல்வதாக ஈபிஎஸ் ராகுல் காந்தியிடம் கூறியதாக சில பத்திரிகைகள் கூட செய்தி வெளியிட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், கூட்டணியில் இருக்கக் கூடிய பாஜகவுக்கும் ஈபிஎஸ் விசுவாசமாக இல்லை என விமர்சித்தார். இந்த விமர்சனத்தை பாஜக டெல்லி தலைமை உன்னிப்பாக கவனித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தான், தற்போது வருமான வரி சோதனை வரை நீண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.

பொதுக்குழுவிற்கு காசு கொடுத்தாரா ஈபிஎஸ்:

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் காசு கொடுத்ததாக விமர்சகங்கள் எழுந்துள்ளன. இதனை, பற்ற வைத்தது, புதுச்சேரி அதிமுக தான். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் காசு கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தான் பேசு பொருளாக இருந்ததை கவனிக்கலாம். அதனால், கூட இந்த வருமான வரித்துறை ரெய்டு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திமுக ஏன் தலையிடுகிறது?:

திமுக ஆட்சிக்கு வந்தால், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியே கொண்டு வருவோம். சட்டத்தின் முன்பாக குற்றவாளிகளை நிறுத்தி தண்டிப்போம் என கூறி வந்தது. அதற்கு ஏற்பவே, ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி, தற்போது காமராஜ் வரை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தீவிரமாக நடந்து கொண்டு வருவதை கவனிக்கலாம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் இந்த ரெய்டுகளில் அடுத்த கட்டம் என்னவோ கிடப்பில் தான் போடப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் உள்ளது. ஆனால், அதிமுகவில் அதிகாரப்போட்டி உச்சத்தில் இருக்கும் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினர்கள் வீடுகளில் நடக்கும் சோதனையை எளிதில் புறந்தள்ளிவிட்டு போய்விட முடியாது. ஜூன் 23ல் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி அறிவித்ததும், ஓபிஎஸ் தரப்பு இரு நீதிபதிகள் அமர்வில் தீர்ப்பை பெற்று வந்ததற்கும், நள்ளிரவு வரை விடிய விடிய விசாரணை நடந்ததற்கும் திமுக ஆதரவு ஓபிஎஸ்க்கு இல்லாமல் இருந்திருக்காது என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதே பின்னணியில், தனி நீதிபதி முன்னணியில், ஓபிஎஸ் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் வீடுகள், மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டும் ஓபிஎஸ்-க்காக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் வகையில் தான் ஈபிஎஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் திமுக அரசை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.  
மொத்தத்தில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே கடும் போட்டி நடப்பது மட்டும் தான் நாம் அனைவரும் அறிந்தது. இதில், டெல்லி மற்றும் தமிழ்நாடு தலைமை யாருக்கு சாதகமாக காய்களை நகர்த்துகிறது. அதிமுக தலைமையைக் கைப்பற்ற ஈபிஎஸ் – ஓபிஎஸ் நடத்தும் அரசியல் சதுரங்கத்தில் டெல்லி அதிகார மட்டம், தமிழ்நாடு அதிகார மட்டத்தை காய்களாக எடுத்து விளையாடுவது ஈபிஎஸ் ஆ- ஓபிஎஸ் ஆ என்பது திங்கள் கிழமை தெரிவந்துவிடும்… அடுத்த லென்ஸ் பகுதியோடு உங்களை சந்திக்கிறோம்…