திமுகவில் இருந்து விலகினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..2021 தோல்வி தான் காரணமா?

ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியே விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார்..!

திமுகவில் இருந்து விலகினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..2021 தோல்வி தான் காரணமா?

ஆசிரியர் டூ அரசியல்:

மறைந்த எம்.ஜி.ஆர் மூலம் 1977-ம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக இருந்தவர், எம்.ஜி.ஆர் மூலம் மொடக்குறிச்சி தொகுதியில் அப்போது போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிமுகவில் வெற்றி திமுகவில் தோல்வி:

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது 1978 முதல் 1980-ம் ஆண்டு வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர், 1980-ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

தொடர் தோல்வி:

அதன்பின் 1989-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991-ல் வெள்ளக்கோவில், 1993-ல் பழனி மக்களவை தொகுதி, 2001-ல் மொடக்குறிச்சி என தொடர் தோல்விகளை சந்தித்தார். இடையில் 1996-ல் மட்டும் மொடக்குறிச்சியில் வெற்றி பெற்றார். 

ஈபிஎஸ்ஸை வென்றவர் சுப்புலட்சுமி:

2004-ல் திருச்செங்கோடு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறையின் இணை அமைச்சராக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அந்த நேரத்தில் அதே திருச்செங்கோடு தொகுதியில் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றவர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரசியல்:

அதன் பிறகு 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடாத அவர் 10 வருடங்களுக்கு பிறகு 2021-ம் ஆண்டு தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் களமிறங்கினார். 2019-ம் ஆண்டு வயது மூப்பால் இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தவர் திடீரென மீண்டும் களம்கண்டார். 

பாஜகவிடம் தோல்வி:

ஆனால் விளைவோ, அதிமுக வேட்பாளரிடம் இல்லாது பாஜக வேட்பாளரிடம் அவர் தோல்வியடைந்தது மிகப்பெரிய பேசு பொருளானது. ஏற்கனவே அதிமுக மீது அதிருப்தியில் இருந்த மக்களிடம், திமுக எளிதாக வென்றிருக்கலாம். ஆனால் தேர்தலின் போது, பெரிதும் முயற்சிகள் எதுவும் எடுக்காததால் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதியிடம் தோல்வியை தழுவினார். 

நீண்ட துணை பொதுச்செயலாளர்:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொதுச் 
செயலாளராகவும் திமுகவில் பதவி வகித்து வருகிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தவர், தற்போது திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 

முதலமைச்சருக்கு புகழாரம்:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021- சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

அரசியலில் இருந்து விலகல்:

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்றும், இந்த நிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியன்று பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதிக்கு அனுப்பிவிட்டேன் எனவும் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.