மது விலக்கு அமலில் இருந்தும் தொடரும் மரணங்கள்... கள்ள சாராயத்தை ஒழிக்குமா அரசாங்கங்கள்!!!

மது விலக்கு அமலில் இருந்தும் தொடரும் மரணங்கள்... கள்ள சாராயத்தை ஒழிக்குமா அரசாங்கங்கள்!!!

கள்ள சாராயத்தால் எந்த மாநிலத்தில், எத்தனை இறப்புகள் நிகழ்கின்றன? மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள மாநிலங்களிலெல்லாம் என்ன நிலை? மதுவிலக்கு அமலில் இருந்தும் பீகாரில் மதுவால் மக்கள் எப்படி இறக்கிறார்கள்? மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் இந்த மது எப்படி வருகிறது? 

கள்ள சாராய மரணங்கள்:

பீகாரில் கடந்த 3 நாட்களில் 66 பேர் கள்ள சாராயத்தால் உயிரிழந்ததையடுத்து பீகார் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அதை குடிப்பவன் சாவான் என்றும் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்கள் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை என்று சட்டசபையில் வெளிப்படையாகவே அறிவித்தார். .இப்போது இது தொடர்பாக பீகார் அரசை முற்றுகையிடுவதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

கள்ள சாராயத்தால் எந்த மாநிலத்தில் எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.  மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள இடங்களிலெல்லாம் என்ன நிலை? மதுவிலக்கு அமலில் இருந்தும் பீகாரில் மதுவால் மக்கள் எப்படி இறக்கிறார்கள்? மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் இந்த மது எப்படி வருகிறது? 

 பீகாரில் என்ன நடந்தது தெரியுமா?:
 
பீகார் மாநிலம் சாப்ராவில் செவ்வாய்க்கிழமை கள்ள சாராயம் குடித்த பலரின் நிலை கவலைக்கிடமானது.  இதனால் 17 பேர் உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  இங்கு இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேபோல், வெள்ளிக்கிழமை பீகாரின் சிவனிலும் கள்ள சாராயம் விற்பனை நடந்துள்ளது.  இதனால் இங்கு காவலர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 

முதலமைச்சர் அறிக்கை:

இதையடுத்து பீகார் முதலமைச்சர் கூறுகையில், ”மதுவினால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கப்படாது.  மது அருந்தி இறந்தால் அவருக்கு உதவி செய்வோமா?  இந்தக் கேள்வி கூட எழாது.  நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் எங்களுடன் இல்லை.  ஆனால் சிபிஐ-சிபிஎம் மக்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்.  மேலும் மது அருந்துபவர்கள் கண்டிப்பாக இறப்பார்கள்” என்று நிதிஷ் கூறினார். 

எதிர்க்கட்சிகள் விமர்சனம்:

தற்போது இந்த அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன.  முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகிறது.  மாநில மக்களைப் பற்றி இதுபோன்ற எண்ணம் கொண்ட முதலமைச்சருக்கு பதவியில் இருக்க உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மாநிலங்களில் கள்ள சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:

 2021: 

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கள்ள சாராயத்தால் 782 பேர் உயிரிழந்தனர்.  உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 137 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 127 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 108 பேரும், கர்நாடகாவில் 104 பேரும், ஜார்கண்டில் 60 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர். 
 
2020: 

கரோனா காலத்தில் கூட, விஷ மதுவால் மரணம் நிகழ்ந்தது.  நாடு முழுவதும் மொத்தம் 931 கள்ள சாராய வழக்குகள் பதிவாகியுள்ளன.  இதனால் 947 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 214 பேரும், ஜார்கண்டில் 139 பேரும், பஞ்சாபில் 133 பேரும், கர்நாடகாவில் 99 பேரும், சத்தீஸ்கரில் 67 பேரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர். 
 
2019: 

2019 ஆம் ஆண்டில், கள்ள சாராயத்தால் நாட்டில் 1296 பேர் இறந்தனர்.  கர்நாடகாவில் கலப்பட சாராயம் குடித்ததால் அதிகபட்சமாக 268 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 191 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 190 பேரும், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் 115-115 பேரும், அசாமில் 98 பேரும், ராஜஸ்தானில் 88 பேரும் உயிரிழந்துள்ளனர். 

2018: 

என்சிஆர்பி அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 1365 பேர் கள்ள சாராயத்தால் இறந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.  இதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 410 பேர் உயிரிழந்துள்ளனர்.  கர்நாடகாவில் 218 பேரும், ஹரியானாவில் 162 பேரும், பஞ்சாபில் 159 பேரும், உத்தரபிரதேசத்தில் 78 பேரும், சத்தீஸ்கரில் 77 பேரும், ராஜஸ்தானில் 64 பேரும் உயிரிழந்துள்ளனர். 
 
2017: 

2017 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1497 கள்ளச்சாராய வழக்குகள் பதிவாகி, அதில் 1510 பேர் உயிரிழந்தனர்.  பெரும்பாலான இறப்புகள் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.  இங்கு 256 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது தவிர, மத்திய பிரதேசத்தில் 216 பேரும், ஆந்திராவில் 183 பேரும், பஞ்சாபில் 170 பேரும், ஹரியானாவில் 135 பேரும், புதுச்சேரியில் 117 பேரும், சத்தீஸ்கரில் 104 பேரும் உயிரிழந்துள்ளனர். 
 
மதுவிலக்கு மாநிலங்களின் நிலை என்ன? :

தற்போது பீகார் தவிர குஜராத், மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது.   இங்கு மது விற்பதும் அருந்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 
                   
தடை இருந்தும் மது எப்படி கிடைக்கிறது?:

”நிர்வாக அலட்சியத்தால், இன்றும் மாநிலங்களுக்குள் மதுபானங்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.  அதிகாரிகளுக்கு எல்லாம் தெரிந்தும் அவர்கள் எதுவும் செய்யவில்லை.   இதில் பல இடங்களில் நிர்வாக அதிகாரிகளுடன் அரசியல் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.  இதனால்தான் மாநிலங்களில் தடை இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.  இந்த சம்பவங்கள் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என மூத்த்ப் பத்திரிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ” மாநிலங்களின் எல்லைகளில் மது கடத்தல்காரர்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு ஏதும் இல்லை.  ஏனென்றால், அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும் பல தலைவர்களும், அமைச்சர்களும் அதனுடன் தொடர்புடையவர்கள்.  மதுவிலக்கு சட்டம் தவறானது என முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி பலமுறை கூறியுள்ளார். அதை அகற்ற வேண்டும்.” எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”நாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” சீனா தாக்குதலுக்கு உள்ளான மக்கள் பேட்டி!!!