மேற்கு மண்டல அமைப்பு செயலாளராகும் உதயநிதி? வேலுமணி ஆட்களை களையெடுக்க நடக்கும் ஆப்ரேஷன்..!

வேலுமணி ஆதரவாளர்களை களையெடுக்க கிளம்பும் உதயநிதி!!

மேற்கு மண்டல அமைப்பு செயலாளராகும் உதயநிதி? வேலுமணி ஆட்களை களையெடுக்க நடக்கும் ஆப்ரேஷன்..!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினாலும், தோல்வி பெற்ற இடங்களில் ஏன் தோல்வி ஏற்பட்டதை என்பதை கண்டறிய முதல்வர் ஸ்டாலின் பல நடவடிக்கைகளை கட்சி ரீதியாக மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 50 தொகுதிகளில், 40 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் என, அக்கட்சி மேலிடம் நினைத்தது. ஆனால் 17 இடங்கள் மட்டுமே கிடைத்ததால் திமுக கட்சி மேலிடம் அதிர்ச்சியடைந்தது. இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து விசாரிக்கை கட்சியின் சட்டத்துறை ஆலோசகரும், எம்.பி.,யுமான, என்.ஆர்.இளங்கோ தலைமையிலான குழு கோவை மற்றும் மேற்கு மண்டலத்திற்கு பயணப்பட்டது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியதால், அங்கு திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. தோல்வியடைந்த திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன், மாவட்ட தலைமை நிர்வாகிகளே தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டினார். 

கோவை திமுக நிர்வாகிகள் பலர் இன்னும் திமுகவில் உயர் பதவியில் இருப்பதாகவும், அவர்கள் மூலம் நமது திட்டங்கள் அனைத்தும் வேலுமணிக்கு முன்கூட்டியே அனுப்பப்படுவதாகவும் புகார் தெரிவித்தார். வேலுமணி போட்டியிட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற ரகசிய கூட்டம், வீடியோகால் மூலம் வேலுமணிக்கு லைவாக போட்டுக் காட்டப்பட்டதால் தான், அங்கு தோல்வியை தழுவ வேண்டியதாயிற்று என உண்மைகள் வெளிவரத் தொடங்கின. 

இந்த நிலையில், திமுகவில் உள்ள வேலுமணியின் ஆதரவாளர்கள் மற்றும் கருப்பு ஆடுகளை களையெடுக்க திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியை மேற்கு மண்டல அமைப்பு செயலாளராக நியமித்து, சிறிது காலம் அங்கு தங்க வைக்கலாம் என கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி படுத்தும் விதமாக கடந்தவாரம் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள் என ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. 

கட்சியில் மூத்த நிர்வாகிகள் இருந்தும், உதயநிதியை உளவு பார்க்க அனுப்புவது ஏன்? என்ற சந்தேகம் எழுவது நியாயமான ஒன்று. ஏற்கனவே தேர்தலின் போது மூத்த நிர்வாகிகளுக்கு சீட் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், உள்கட்சி பூசலும் இருந்த நிலையில், கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ள உதயநிதியை அனுப்புவது சரிதானே?