திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரான பிறகு தான் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என திருச்செங்கோட்டில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.
ஆ.ராசா பேச்சு:
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், திமுக எம்.பி.யும், அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆன ஆ.ராசா, யாரெல்லாம் இந்துக்குள் அடங்குவர் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை சொல்வதாக சில கருத்துகளை முன்வைத்து பேசியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவாகவும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்திருந்தனர். அதேசமயம், ஆ.ராசாவின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், பாஜகவினர் ஆ.ராசாவின் பேச்சுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா:
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.கைலாசம்பாளையம் ஊராட்சி பகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய வி.பி.துரைசாமி, மத்திய அரசின் நிதியை பெற்று திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் ஸ்டாலின், தானே செய்தது போல் காட்டிக்கொள்கிறார். அதேபோல், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என மக்களை துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் நடமாட்டம்:
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் வந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மாணவர்கள் பள்ளி கேட்டிற்கு வெளியே போதைப் பொருட்களை வாங்கி செல்வதால் வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது ஒருவிதமான மயக்கத்திலேயே இருந்து வருகின்றனர். எனவே, பிள்ளைகளைப் பெற்ற நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளின் நலனின் அக்கறைகொண்டு அவர்களை கண்காணிக்க வேண்டும் என நலத்திட்ட உதவிகளை பெற்ற மக்களிடம் கூறினார்.
திமுக கண்டிக்கவில்லை:
தொடர்ந்து, சமீபத்தில் இந்து பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவை திமுக தலைவர்கள் கண்டிக்கவில்லை என்றும், நல்லவர்கள் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டுமே நல்ல வார்த்தைகள் பேசுவார்கள் என்றும் திமுகவை விமர்சித்து பேசினார். ஏற்கனவே, ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், தற்போது பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி சுட்டிக்காட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.