கமிஷன், கலெக்சன், கரப்ஷன்..! அமிதாஷாவிடம் ஈபிஎஸ் பேசியது என்ன?

கமிஷன், கலெக்சன், கரப்ஷன்..! அமிதாஷாவிடம் ஈபிஎஸ் பேசியது என்ன?

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளார். 

ஈபிஎஸ் - மோடி:

அதிமுகவில் பல குழப்பங்களும், மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. தனியாக பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளர் ஆனா பின்னர் எடப்பாடி பழனிசாமி இது வரை பிரதமர் மோடியை தனியாக சந்திக்கவில்லை. ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவிற்காக டெல்லி சென்ற போதும் மோடியை சந்திக்காமல் வந்தார். செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்காக மோடி சென்னை வந்த போதும் ஈபிஎஸ்ஸை தனியாக சந்திக்கவில்லை. இதனால் ஈபிஎஸ் இடைகாலப் பொதுச்செயலாளர் ஆனது மோடிக்கு விருப்பம் இல்லை என்ற கருத்துக்களும் பரவி வந்தது.

3 நாள் பயணம்:

இந்நிலையில், 3 நாள் பயணமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை எம்.பி. சிவி சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர். 

மேலும் படிக்க: ரெய்டு குறித்து ஓபிஎஸ்சின் கருத்து...ஷாக்கான ஓபிஎஸ் நிர்வாகிகள்...தூண்டில் போடும் ஈபிஎஸ்!

அமித் ஷா சந்திப்பு:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கிய எடப்பாடி பழனிசாமி,  பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோதாவரி- காவிரி நீர் இணைப்பு திட்டத்தை தீவிரப்படுத்தவும், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது அது குறித்து பேசமுடியாது என தவிர்த்துவிட்டார்.

கமிஷன், கலெக்சன், கரப்ஷன்..!

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எந்த ஒரு துறையிலும் நியாயமான பணி நடைபெறவில்லை. இது மக்களுக்கு மிகப் பெரிய துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: நான் என்ன மன்னிப்பு கேட்கணும்..? ஒட்டுமொத்தமாக பதில் கொடுத்த ஆ.ராசா..!

பிரதமருடன் சந்திப்பு?:

டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியையும் சந்திப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில்,  பிரதமர் சந்திக்கும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் அமித் ஷாவுடன் அரசியல் பேசவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

அடுத்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈபிஎஸ் மனு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.