பஞ்சாப்பில் காங்கிரஸை அசைத்து பார்க்கும் காமெடியன்..!

ஆம் ஆத்மியின் தேர்வால் கதிகலங்கும் காங்கிரஸ்..!

பஞ்சாப்பில் காங்கிரஸை அசைத்து பார்க்கும் காமெடியன்..!

இந்தியாவில், உத்திரபிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கெல்லாம் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இதில் குறிப்பாக பஞ்சாப்பில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி மக்கள் மத்தியில் கவனம் பெறத் துவங்கியுள்ளது. பஞ்சாப்பில் இந்திய தேசிய காங்கிரஸின் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக ஆட்சியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் கூட, அங்கு காங்கிரஸ் மீதான மக்களின் பார்வை ஆணித் தனமாக இருந்ததால், பெரிதாக பாஜக கவனம் ஈர்க்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு சென்ற போது, விவசாயிகள் அவர் செல்லும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டதும், பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றதும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

பாஜகவையே பெரிதும் கண்டுக்கொள்ளாத அம்மாநில மக்களின் பார்வை தற்போது ஆம் ஆத்மி மீது விழுந்துள்ளது. அங்கு பெரும்பாலும் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்புகள் தெரிவித்தாலும் ஆம் ஆத்மிதான் அதிகபட்ச இடங்களை வெல்லும் என்று களநிலவரம் தெரிவிக்கின்றது.. பஞ்சாப்பில் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஆம் ஆத்மியை சேர்ந்த காமெடியன் ஒருவர் வில்லனாக வந்து சேர்ந்து இருக்கிறார். யார் அந்த காமெடியன் என்று பார்த்தால், விளாடிமர் சேலன்ஸ்கி தான் அவர். உக்ரைன் நாட்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்தவர் திடீரென 2019-ம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ஆனவர். அந்த நாட்டு அதிபர் பெட்ரோவை எதிர்த்து தேர்தலில் நின்றதோடு அதில் வெற்றிபெற்று உக்ரைன் நாட்டு அதிபராகவும் வென்றார். தேர்தலில் அவரது வெற்றிக்கு காரணம், அவரின் கலகலப்பான பிரசாரம் எனக் கூறப்பட்டது. அவர் சொன்ன ஒன் லைன் காமெடிகள் அந்நாட்டு ஆளும் தரப்பை அசைத்தது. அதேபோல தான் பஞ்சாப்பை ஆளும் காங்கிரசை தனது காமெடியால் அசைத்து வருகிறார் பகவன் சிங் மன். பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவன் சிங் மன். பஞ்சாப்பில் ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி கொஞ்சம் தூரம் போனால் போதும் சத்தமாக சிரித்து.. அரசியலை பகடி செய்து பேசிக்கொண்டு இருக்கும் ஒரு சிங்கை கண்டிப்பாக பார்ப்பீர்கள்.. அப்படி ஒரு காமன் மேன் தோற்றம் கொண்ட எப்போது சிரித்து கலகலப்பாக இருக்கும் காமெடியன்தான் பகவன் சிங் மன்.

பஞ்சாப்பில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவன் சிங் மன்னுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் இருந்தது. வசதியாக குடும்பம். பஞ்சாப் பல்கலையில் படித்தவர். அங்குதான் தன்னுடைய காமெடி வாழ்க்கையை தொடங்கினார். மேடைகளில் ஏறி ஸ்டான்ட் அப் காமெடி செய்தவர் 1990கள் தொடக்கத்திலேயே அதை சிடி கேசட்டில் விற்க தொடங்கினார். இவரின் காமெடிகள் வேகமாக வைரலாகி மக்களிடம் பிடித்த நபராக மாறிப்போனார்.. 90ஸ்களில் தமிழில் எப்படி சில சன் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமாக இருக்குமோ அப்படித்தான் இவரின் பஞ்சாப்பில் காமெடிகளும். காமெடியில் அரசியல் கலந்து அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது இவரது வழக்கம். இவரது அப்பா, வட இந்திய அரசியல் மட்டுமல்லாது, தென்னிந்திய அரசியலையும் கரைத்து குடித்திருந்ததால், பகவன் சிங்க்குக்கும் அரசியல் நன்கு பரிட்சியம். திமுக பற்றி 12 வயதிலேயே படித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் பகவன். முக்கியமாக சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்.. எமர்ஜன்சி மீதான கோபம்.. பொற்கோவில் உள்ளே ராணுவம் சென்றது ஆகியவை ஒரு காரணம். இன்னொரு காரணம் பகத் சிங் மீதான ஈர்ப்பு. காங்கிரசை பகத் சிங் ஏற்றுக்கொண்டதே இல்லை.. நான் மட்டும் எப்படி ஏற்பேன் என்பதுதான் இவர் ஆம் ஆத்மியில் சேர்ந்த பின் சொன்ன கருத்து.. அந்த அளவிற்கு இவருக்கு காங்கிரஸ் என்றாலே ஆகாது. இவரின் மஞ்சள் நிற டர்பனும் பகத் சிங் மீதான அன்பால்தான்.

இதனால்தான் என்னவோ தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு இவர் ஸ்டான்ட் அப் காமெடிகளில் தூக்கலாக இருக்கும். திராவிட கட்சிகள் எப்படி வலிமையான மேடை பேச்சுக்கள் மூலம் மக்களை தன் பக்கம் திருப்பியதோ அதைத்தான் காமெடி பேச்சுக்கள் மூலம் பகவன் சிங் மன் பஞ்சாப்பில் செய்து வருகிறார். 2011ல் அரசியல் ஆர்வத்தால் பீப்பிள் பார்ட்டி ஆப் பஞ்சாப்பில் செயல்பட்டு வந்தார். 2012ல் சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தாலும் இவரின் அரசியல் நடவடிக்கைகள் மக்களால் கவனிக்கப்பட்டது. டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்ற பிறகு பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கால் பதிக்க நினைத்த போது, கெஜ்ரிவாலின் பார்வை பட்டது பகவான் சிங் மீது தான். உடனே பிபிபி கட்சியில் இருந்து விலகி ஏஏபி கட்சியில் இணைந்தார் பகவன் சிங் மன். 2014 லோக்சபா தேர்தலில் பஞ்சாபில் சங்ரூர் தொகுதியில் வென்றார். டெல்லியில் கூட ஆம் ஆத்மி லோக்சபா சீட்டை வெல்ல முடியாத நிலையில் இவர் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை ஒரு தொகுதி வெல்ல வைத்து அசத்தினார். 2019ல் மீண்டும் அதே தொகுதியில் வென்று லோக்சபா சென்றார்.

இவரின் காங்கிரஸ் எதிர்ப்பு இப்போது இவரை முதல்வர் வேட்பாளர் ஆக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. இடையில் 2019ல் அரசியல் கூட்டம் ஒன்றில் இவர் குடி போதையில் தள்ளாடியது பெரிய சர்ச்சையானாலும் பின்னர் மேடை கூட்டம் ஒன்றில் தனது தாய் மீது சத்தியம் செய்து குடிப்பதை நிறுத்துவதாக கூறினார். இப்போது இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பஞ்சாப்பில் காங்கிரசுக்கான வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதை நான் சொல்லவில்லை.. காங்கிரஸ் நடத்திய தேர்தல் சர்வே ஒன்றில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.காங்கிரஸ் நடத்திய இன்சைட் சர்வேவின் படி.. ஆம் ஆத்மி கட்சி பகவன் சிங் மன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே அக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளதாம். முக்கியமாக மால்வா மண்டலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 117 இடங்கள் உள்ளன. அதில் மால்வா மண்டலத்தில் 69 இடங்கள் உள்ளன. இங்குதான் பகவன் சிங் மன்னிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பகவன் சிங் மன் மால்வா பகுதியை சேர்ந்தவர்.. அங்கு உள்ள சங்ரூர் லோக்சபா எம்பி.. கடந்த சட்டசபை தேர்தலில் இங்குதான் ஆம் ஆத்மி 18 இடங்களை வென்றது. இந்த நிலையில் பகவன் சிங் மன் வருகையால் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த மண்டலத்திலும் அருகாமையில் இருக்கும் மற்ற மாவட்டங்களிலும் ஆதரவு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் உட்கட்சி சர்வே தெரிவித்து உள்ளதாம்.

இத்தனை வருடங்களாக அங்கு அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ், சரிய துவங்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல், அமரீந்தர் சிங் விலகல், சித்துவுக்கும், சரண்ஜித் சிங் சன்னிக்கும் இடையே மோதல், களத்தில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள், இப்படி பல காரணங்களால் காங்கிரஸ் அங்கு பிளவுபட்டு இருப்பதால், பகவன் சிங் மன்னின் வருகை மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ஊரு ரெண்டு பட்டா, கூத்தாடிக்கு கொண்டாட்டம்...