கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்... தனி மனுஷியாக போராடி சாதித்த சிங்கப்பெண் - மாளவிகா ஹெக்டே!!

தனி பெண்ணாக சாதித்த மாளவிகா ஹெக்டே!!
கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்... தனி மனுஷியாக  போராடி சாதித்த  சிங்கப்பெண் - மாளவிகா ஹெக்டே!!
Published on
Updated on
2 min read

இந்தியா முழுவதும்  தனது கடைகளைப் பரப்பி பிரபலமடைந்த  Café Coffee day நிறுவனம் கடனால் கடும் வீழ்ச்சியில் தள்ளப்பட்ட போது ஒற்றை பெண்ணாக நின்ற மாளவிகா ஹெக்டே ஒரே வருடத்தில் கடனிலிருந்து நிறுவனத்தை மீட்டெடுத்துள்ளது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பிரபலமான Café Coffee day நிறுவனத்தின் உரிமையாளர் V.G.சித்தார்த்தா பல முன்னணி நிறுவனங்களோடு கடுமையாக போட்டிப்போட்டு இந்நிறுவனத்தை உருவாக்கினார். இந்தியா முழுவதும் 165 நகரங்களில் கிட்டதட்ட 575 கடைகளை பரப்பி வளர்ந்த இந்த நிறுவனத்தை மேலும் வளர்க்க நினைத்த சித்தார்த்தா ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் கடந்த 2019-ஆம் ஆண்டு  ஜுலை 29 ஆம் தேதியன்று  மங்களூருவில் உள்ள நேத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கு காரணம் சித்தார்த்தா தனது நிறுவனத்தின் பங்குகளை விட அதிகக் கடனை வாங்கியிருந்ததாகவும் இதனால் முதலீட்டாளர்களின் அழுத்தம் மற்றும் வருமான வரித்துறையினரின் அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் தவித்துவந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டதையடுத்து, இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? 7,200 கோடிக் கடனை யார் அடைப்பது? இந்த நிறுவனத்தை நம்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தலையெழுத்து என்ன? என்று பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் அந்த நிறுவனத்தின் கடன் தொகை காரணமாகப் பலரும் காபி டே நிறுவனத்தின் மீது அதிருப்தி அடைந்திருந்தனர். இந்த கேள்விகளுக்கு எல்லாம்  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கணவனை இழந்து கடும் சோகத்தில் இருந்துவந்த சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே ஒரு அசாதாரணமான முடிவை எடுத்திருக்கிறார்.

அதன்படி  கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் காபி டே நிறுவனத்தின் செயல் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட மாளவிகா ஹெக்டே திறமையாக செயல்பட்டு தற்போது மார்ச் 31 2021 கணக்குப்படி அந்த நிறுவனத்தின் கடன் தொகையை 1,731 கோடியாக குறைத்திருக்கிறார். இந்தத் தகவல்தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.  

மேலும் 7,200 கோடி கடனில் தவித்துவந்த காபி டே நிறுவனம் தற்போது மாளவிகாவின் திறமையான செயல்பாட்டால் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது முதலீட்டை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது. கணவரது இழப்பை கடந்து தனி பெண்ணாக நின்று இத்தனையும் செய்துமுடிந்த மாளவிகா ஹெக்டே கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் என்பதும் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com