காதலர் தினத்தில் புதிய உத்திகளை கையாளவுள்ள திரையரங்குகள்......

காதலர் தினத்தில் புதிய உத்திகளை கையாளவுள்ள திரையரங்குகள்......

பிப்ரவரி மாதம் என்றாலேயே பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது காதலர் தினம்.  பிப்ரவரி 14-ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்த வேலண்டைன்ஸ் டே என்ற நாளுக்காக எத்தனையோ காதல் ஜோடிகள் வருடம் முழுவதும் காத்திருப்பார்கள். 

ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, கிஸ் டே, ஹஹ் டே, லவ்வர்ஸ் டே என ஒவ்வொரு நாளையும் கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். 

இந்த நாட்களை எண்ணி காதலில் திளைத்து வரும் காதலல்களுக்கு வலைவீசியுள்ளது திரையரங்குகள். காதல் என்ற ஓர் புனிதமான உணர்வு இங்கு தானாய் எழுவதை விட, காதல் திரைப்படங்களை பார்த்தே பலருக்கும் காதல் மலர்கிறது. 

எத்தனையோ திரைப்படங்கள் காதலை புனிதப்படுத்துவதோடு, சமுதாயத்தில் பெரும் புரட்சிகளையும் விதைத்துள்ளது. சாதி மதம், இனம் ஆகிய பாகுபாடுகளை தகர்த்தெறிந்து அன்பு ஒன்றையே போதிக்கும் இந்த காதலின் வேதங்களை இயக்குநர்கள் உணர்த்தியுள்ளனர். 

காதலின் மகத்துவம், காதலின் அர்த்தம், காதலின் மேன்மை காதலில் கண்ணியம் ஆகிய பல்வேறு உணர்வுகளை, உணர்ச்சிகளை மனிதனில் புகுத்திய காதல் சார்ந்த திரைப்படங்கள் தற்போது திரைப்படங்களில் மீண்டும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் பலரும், தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு இடங்களுக்கு செல்வதுண்டு.  கடற்கரை, பூங்காக்கள் நிறைந்து வரும் இந்த வாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் செய்த வித்தியாச செயல்பாடுதான் இவை.

சினிமாவில் காதலை அள்ளித் தெளித்த திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாக காதலர்களை திரையரங்குகளுக்கு இழுத்து வருகின்றனர்.  அதன்படி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, லவ் டுடே ஆகிய தமிழ் படங்கள், பிரேமம், ஹிருதயம், டூடி போன்ற மலையாள திரைப்படங்கள், ஷாருக்கான் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, மற்றும் உலகளவில் புகழ் பெற்ற பிரமாண்ட காதல் காவியம் டைட்டானிக் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளை அலங்கரித்து வருகிறது. 

பொதுவாக ஒரு திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்வதென்றால் அதில் லாப நோக்கம் இருப்பது என்பதை எதிர்பார்க்க முடியாதுதான்.  பலநூறு முறை பார்த்து சலித்த படங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பான படங்களானாலும், அதனை திரையரங்கில் காண்பதற்கு தனி ரசிகர் பட்டாளம் வரலாம். தன் இணையோடு வந்து காதல் படங்களை பார்த்து ரசிப்பதற்கு நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இப்படியான வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளனர். 

காதலர் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு தங்கள் காதல் கைகூடுகிறதோ இல்லையோ, பல நல்ல திரைப்படங்களை திரையரங்கில் காண தவறியவர்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் பலனளிக்கும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்க:  பிரியாணியில் கிடந்த இரும்பு துண்டு.... அதிர்ச்சியான வாடிக்கையாளர்....