முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்...எங்கெங்கு என்னென்ன ஒப்பந்தங்கள் ?

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்...எங்கெங்கு என்னென்ன ஒப்பந்தங்கள் ?

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உலகத்தரத்தில் உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கிறார்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டுக்குள் உயர்த்த இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என கூறினார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள தொழிலதிபர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைக்கவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளவும் 9 நாட்கள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமையான இன்று செல்கிறார். தொடர்ந்து 24ம் தேதி சிங்கப்பூர் சென்றடையும் முதலமைச்சர், அங்கு நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ”நான் சிகரெட் குடிப்பதை தடுத்து நிறுத்துவார்; என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்” - நடிகர் ரஜினிகாந்தின் உணர்வு பூர்வமான பேச்சு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக சிங்கப்பூர் தொழில் நிறுவன கூட்டமைப்புத் தலைவர் நெய்ல் பரேக் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணத்தை கவனித்துக் கொள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 3 நாட்களுக்கு முன்னதாகவே சிங்கப்பூர் சென்றது குறிப்பிடத்தக்கது. 

இதைத்தொடர்ந்து 25ம் தேதி ஜப்பானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிக்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கீடோ நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர், டோக்கியோவில் 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து கயோசூடோ மற்றும் ஜெட்ரோ ஆகிய ஜப்பான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஜப்பான் தொழில்துறை அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பானின் வர்த்தக நிறுவனமான ஜெட்ரோ நிறுவனத்தின் தலைவருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக 9 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 31ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்.