மறக்க முடியுமா இந்த நாளை..! புல்லரிக்க வைக்கும் நினைவுகள்..!

மறக்க முடியுமா இந்த நாளை..! புல்லரிக்க வைக்கும் நினைவுகள்..!

கிரிக்கெட் காதலரகளால் மறக்க முடியாத தினமான இன்று 2007 ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி அபாரமாக வென்று சாதனை படைத்தது.

இந்திய அணி:

நீண்ட தலைமுடியுடன் தோனி, முழுவதும் இளம் வீரர்கள், உற்சாகம் பீறிடும் வகையில் பந்துவீச்சு, ஃபீல்டிங், தேவைக்கு ஏற்பட அதிரடி ஆட்டம் என அனைத்தும் கலந்த கலவையாக இந்திய அணி இருந்தது.

2007 டி20 போட்டி:

2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. மொத்தம் 12 அணிகள் போட்டியிட்டன. 3 ஆட்டங்களில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பலமிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

இந்தியா - பாகிஸ்தான்:

மறுபுறம், நியூஸிலாந்தை வீழ்த்திய பாகி்ஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி ஆட்டம், அதிலும் பாகிஸ்தானுடன் இறுதி போட்டி என்றால் கேட்கவா வேண்டும். தொடக்கம் முதல் கடைசி ஓவரை வரை போட்டியை பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியில் இருந்தனர் என்றே கூறலாம்.

இறுதி ஆட்டம்:

செப்டம்பர் 24-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களில் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே முகமது ஹபீஸ் ஆட்டமிழக்க, 3-வது ஓவரில் கம்ரான் அக்மல் டக்அவுட்டில் வெளியேறினர். இரு பெரிய விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பரபரப்பான நிமிடங்கள்:

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில்,  பாகிஸ்தானிடம் ஒருவிக்கெட் மட்டுமே மீதம் இருந்தது. கடைசி ஓவரை அனுபவமில்லாத ஜோகிந்தர் சர்மாவிடம் தோனி அளித்தார். முதலிரண்டு பந்துகளை வீணாக்கிய மிஸ்பா , 3-வது பந்தில் சிக்ஸர் அடித்து பரபரப்பை எகிறச் செய்தார்.

வெற்றி:

கடைசி 4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை. 4-வது பந்தை ஜோகிந்தர் சர்மா வீசும் முன்னர் தோனி அவரிடம் சென்று ஏதோ பேசினார். அதன்பின் நன்றாக மூச்சை இழுத்துவிட்டு, ஜோகிந்தசர் சிங் வீசிய பந்தை மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்று பின்புறம் தூக்கி அடித்தார். சிக்ஸர் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச்சாக விழுந்தது. இந்திய அணைக்கு வெற்றியாகவும் மாறியது.

கொண்டாட்டங்கள்:

ஜோகிந்தர் சர்மாவை பார்த்து ஓடிவந்த தோனி அவரைக் கட்டி அணைத்து, தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய அணி தனது முதலாவது டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் அபாரமாக வென்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.

அழகிய அந்த தருணத்தைக் கடந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போட்டி இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் உள்ளது. உலகக் கோப்பை வென்ற அந்த தருணத்தை நினைவுகூர்ந்து பிசிசிஐ, ஐசிசி, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் புகைப்படங்களை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.