பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்.. தகராறுக்கு பின்னணியில் அரசியலா? 

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்.. தகராறுக்கு பின்னணியில் அரசியலா? 

கோவையில் பெண் ஓட்டுநரை பேருந்து நிறுவன உரிமையாளர் நீக்கியதாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் நடந்தது என்ன? தி.மு.க. எம்.பி. கனிமொழியின் வருகைதான் காரணமா? என பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன. இதற்கு பின்னனியில் அரசியல் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சூர்யவம்சம் படத்தின் சக்திவேல் டிரான்ஸ்போர்ட் காட்சிக்கு பிறகு நிஜ வாழ்க்கையில் ஒரு பேருந்துக்காக கால் கடுக்க காத்திருந்தனர் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் இந்த டிரைவர் ஷர்மிளா என்ற ஒருவர்தான்.

கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்தார். தந்தை வீடு வீடாக கேஸ் சிலிண்டர் போடுவதோடு ஆட்டோவும் ஓட்டுவதை பார்த்த ஷர்மிளாவுக்கு தானும் டிரைவராக என ஆசை முளைத்தது. 

இதையடுத்து ஆட்டோ, கால்டாக்சி மற்றும் கனரக வாகனங்களையும் ஓட்டுவதை கவனித்த வி.வி. டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் துரைக்கண்ணு என்பவர் ஷர்மிளாவுக்கு பேருந்து ஓட்டுவதற்கு அனுமதி அளித்தார்.

கோவை மாவட்டத்தின் முதல் பெண் - டிரைவர் என்ற அடையாளத்தைப் பெற்ற ஷர்மிளா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். பேருந்துகளில் இதுவரை ஆண் டிரைவர்களையே பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணிப்பதற்கு அதிகம் பேர் விரும்பினர். 

பேருந்து பெண் டிரைவரான ஷர்மிளா, இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என அனைத்திலும் பிரபலமான நிலையில் அப்போதுதான் உண்டானது ரகளை. ஒரு சில யூ-டியூப் சேனல்களில் புதிய பேருந்து வாங்குவதே லட்சியம் என கூறியதில் இருந்து ஷர்மிளா கட்டம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஷர்மிளாவின் ரீல்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ஷர்மிளாவிடம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதையடுத்து 22-ம் தேதியன்று கனிமொழி வருவதை உறுதி செய்து கொண்ட ஷர்மிளா, அதற்கான ஏற்பாட்டில் தீவிர ஆர்வமாக இருநதார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து கிளம்பிய சில நொடிகளிலேயே அங்கு கனிமொழி எம்.பி. வந்தடைந்தார்.

பேருந்தில் ஏறிய கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பிற பயணிகளிடம் சகஜமாக உரையாடி வந்தார். அப்போது அதே பேருந்தில் நடத்துநராக இருந்த மற்றொரு பெண், கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. 

அதற்கு ஷர்மிளா ஏற்கெனவே அனைவரும் டிக்கெட் எடுத்து விட்டதாக கூறியதைத் தொடர்ந்து, ஷர்மிளாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நடத்துனர்.  இதனையெல்லாம் வேடிக்கை பார்த்த கனிமொழி, இருவரையும் சமாதானம் செய்து வைத்து விட்டு பெருமூச்சு விட்டார். மேலும் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வரையிலும் டிக்கெட் எடுத்த கனிமொழி, இவர்களது சண்டையினால் பீளமேட்டிலேயே இறங்கி ஷர்மிளாவுக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசளித்து விட்டு காரில் சென்றார். 

இந்த சம்பவத்தை பேருந்து உரிமையாளரிடம் கூறியபோது விளம்பரத்துக்காகவே அனைவரையும் ஏற்றுவதா? என கூறியிருக்கிறார் துரைக்கண்ணு. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஷர்மிளா, அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுகுறித்து பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணுவிடம் கேட்டால், ஷர்மிளாவை இதற்கு முன் நேரில் சந்தித்ததே இல்லை என மழுப்பினார். ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு வரை ஷர்மிளாவுடன் பல நேர்காணலில் பேசுவதும், உரையாடுவதும் என வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆண்களால் சாதிக்க முடியாததை பெண்களும் சாதிக்க வேண்டும் என்றே அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால் ஒரு பெண் ஏதேனும் சாதனையை செய்து விட்டால் அதுவே பலருக்கும் கண்களை உறுத்துகிறது என்பதற்கு ஷர்மிளாவே சாட்சி. 

தற்போது வேதனை என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்தில் கோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பயணித்த போது உருவாகாத தகராறு, தி.மு.க. எம்.பி. கனிமொழி பயணித்தபோதுதான் பிரச்சினை பூதாகமாக வெடித்துள்ளது. 

இதையும் படிக்க:பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்! காரணம் என்ன?