பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பெண் மண்டை உடைந்து பலத்த காயம்!!

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பெண்  மண்டை உடைந்து பலத்த காயம்!!

ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பேருந்து நிலையத்தில் சிறுவர்களும், இளைஞர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் தங்களுக்குள்ளேயே இரு பிரிவினராக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது தொடர்கதையாக உள்ளது. அதற்கான காரணம் கேட்டால், எனது நண்பரை அடித்து விட்டார்கள், அதற்காக நாங்கள் தட்டிக்கேட்டோம், அப்போது தான் எங்களது கெத்து தெரியும் என ஆகாத வசனங்களை சொல்லிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் சரமாரியாக தாக்கிக் கொள்வதில், பலர் இறந்துள்ளனர் என்றால், இவர்களது சண்டை எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்.. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், அடித்துக் கொள்ளும் மாணவர்களை விலக்கி விட வந்தவர்களும், சமாதானம் செய்ய வருபவர்களும் சில சமயங்களில் சிக்கிக் கொண்டு அடிவாங்கி காயங்களுடன் செல்பவர்களும் இங்குண்டு. இதுபோன்றதொரு சம்பவம் தான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நிகழ்ந்துள்ளது. 

பொன்னேரி அருகே ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பேருந்து நிலையத்தில் திடீரென பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மாணவர்கள், தங்களுக்கு தெரிந்த இளைஞர்கள் சிலரை அழைத்துக்கொண்டு இன்னொரு தரப்பில் இருக்கும் மாணவர்களை அட்டக் செய்துள்ளனர். இந்த மோதலில் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த இரு தரப்பின் மாணவர்களும், இளைஞர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த பழக்கடைகள், பூக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை கொண்டும் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த மோதலில் அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுக்க பரபரப்பு நிலவி வந்தது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனையில் அடிச்சு கிட்டது என்னவோ மாணவர்கள் தான், ஆனா ரத்தம் வந்ததோ அந்த பூ வியாபாரம் செய்த அப்பாவி பெண்ணுக்கு தான்.