கன்னியாஸ்திரியை 13 முறை வன்கொடுமை செய்த வழக்கில் விடுதலையானார் பிஷப்..!

படுகுஷியாக பிஷப் பிராங்கோ : பணபலம் வென்றதாக கன்னியாஸ்திரிகள் வேதனை..!

கன்னியாஸ்திரியை 13 முறை வன்கொடுமை செய்த வழக்கில் விடுதலையானார் பிஷப்..!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் என்றாவது யாராலும் நம்ப முடியாத அளவுக்கு, உறைய வைக்கும் நிகழ்வுகள் நடப்பது உண்டு. அந்த வரிசையில், கேரளாவில் கன்னியாஸ்திரியை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிஷப் பிரான்கோ முலக்கல் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகத்தையே அதிர செய்தது. கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல்.. இந்தியாவின் முதல் கத்தோலிக்க பிஷப் இவர்தான்.. இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு கன்னியாஸ்த்ரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்தார். அதாவது 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பிஷப் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கன்னியாஸ்த்ரி கூறிய குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக பல கன்னியாஸ்திரிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு தான் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிஷப் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஜாமினில் அவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக தனது பிஷப் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து தன் மீதான வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ஆரம்பித்தார் பிராங்கோ முலக்கல். இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த வழக்கு. கடவுளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு பிஷப் இது போன்ற கீழ்தரமான செயலில் ஈடுபடுவதா என அவருக்கு எதிராக குரல்கள் வலுக்க ஆரம்பித்தன. இந்த வழக்கின் விசாரணை, கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் நீதிமன்றத்தில் இத்தனை வருடங்களாக நடைபெற்று வந்தது. 105-நாட்கள் ரகசிய விசாரணை இந்த வழக்கில் நடந்தது. அதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு இன்று வழங்க்கப்பட்டது. 

வலுவான சாட்சிகள் எதுவும் இல்லாததால் பிஷப் பிராங்கோ முலக்கல்லை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அங்கு கூடியிருந்தோரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிஷப் பிராங்கோ மட்டும் படு குஷியானார். தீர்ப்பு வெளியானபிறகு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பிஷப், அழுதபடியே தனக்காக வாதாடிய வழக்கறிஞரை கட்டிப்பிடித்து கொண்டார்.. தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு, "கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாய் நின்ற மக்களுக்கு நன்றி.. கடவுளின் தீர்ப்பே கோர்ட்டின் தீர்ப்பாக வர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன்... கடவுளும் கடவுளின் சக்தியும் இருப்பதை உலகிற்கு காட்ட வேண்டிய நபர் நான்... அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது... மதம், ஜாதி வேறுபாடின்றி பிரார்த்தனையில்தான் சக்தி உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். காய்க்கும் மரத்தில்தான் கல்லெறிவார்கள்.. அதனால் நான் பெருமைப்படுகிறேன்... எல்லாரும் ஜெபம் செய்யுங்கள்" என்றார். 

கேரளாவில் மிக முக்கியமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பிராங்கோவுக்கு இந்த வழக்கில் ஜாமீன் கொடுக்கப்பட்ட போதே பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இன்றோ நீதிமன்றமே அவர் குற்றவாளி அல்ல என்பது போல தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரி சார்பாக வழக்கஞர் சந்தியா ராஜு, "பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனரீதியான பாதிப்புகளை, பிஷப் தரப்பில் நிறைய உருவாக்கினார்கள்.. இந்த பாதிப்பினால், கன்னியாஸ்த்ரி மன ரீதியான உளைச்சலுக்கு ஆளானார்" என்பதே உண்மை என்றார்..''நீதிமன்றத்தில் இருந்து இதுபோன்ற தீர்ப்பு வந்ததை நாங்கள் இன்னும் நம்பவில்லை. நீதித்துறையிடமிருந்து எங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை. செல்வாக்கு மிக்கவர்களின் பலம், பண பலம் வென்று விட்டது" என கன்னியாஸ்திரிகள் வேதனையுடன் கண்ணீர் மல்க புலம்பியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்புக்கு பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வரும் சூழலில், யார் இந்த வழக்கில் குற்றவாளி என்பது அந்த லார்ட்-க்கே வெளிச்சம்..