கொங்கு டாக்டருக்கு குறிவைக்கும் பாஜக: திமுகவிற்கு முன்பே தட்டித்தூக்க ப்ளான்

கொங்கு டாக்டருக்கு குறிவைக்கும் பாஜக:  திமுகவிற்கு முன்பே தட்டித்தூக்க ப்ளான்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பிரபல வேட்பாளர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் சினிமா பிரபலங்களும், அரசியல் மற்றும் தொழிலதிபர்களும் ஆர்வமுடன் தங்களை இணைத்துக்கொண்டனர். இதையடுத்து அக்கட்சியினர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரிதாக வாக்கு எண்ணிக்கையை பெறவில்லை. குறிப்பாக கோவை தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசன் தோல்வியடைந்ததால், அக்கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

பின்னர் ஒவ்வொருவராக மநீம-வில் இருந்து விலகி வருகின்றனர். 
அந்த வகையில், மநீம சார்பில் கடந்த முறை எம்பி தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற மகேந்திரன் தற்போது பிரபல கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் திமுக-வில் இணையவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து தற்போது பாஜகவில் இணையவுள்ளார் என்ற செய்திகள் உலா வந்தம் உள்ளன. மகேந்திரனுக்கென்று தனிப்பட்ட அளவுக்கு ஓட்டு வங்கி இருப்பதால் அவரை தங்களது கட்சிகளில் சேர்க்க சில தலைவர்களும் ஆர்வம்காட்டி வருகின்றனர். 

பொதுவாக ஒரு கட்சிக்கு, திறமையுள்ள நிர்வாகிகளைவிட பசையுள்ள நிர்வாகிகளுக்கே அதிக டிமாண்ட் இருக்கும். அந்த வகையில், கட்சியை விட்டு வெளியே வந்த மகேந்திரனுக்கு, மறுநாளே டிமாண்ட் கூடி வருகிறது. எனவே இவரை திமுக அழைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக சற்று முந்திக் கொண்டு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே கோவை பகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இருந்து வருகிறது. எனவே, மகேந்திரன் போன்றோரின் வருகையால், இருக்கும் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என பாஜக நினைப்பது பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.